ஆந்திராவில் நடந்த சோகம்..! வீட்டுக்கு தெரியாமல் கர்ப்பம்; குழந்தை பெற்ற மாணவி மரணம்..!

ஆந்திராவின் சித்துாரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்த, 16 வயது மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார்; இது, அவரது வீட்டில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. தங்கள் மகள் எடை அதிகரித்து குண்டாக இருப்பதாக பெற்றோர் நினைத்தனர்.
பள்ளியில் மாணவியின் நடவடிக்கைகளை கவனித்த ஆசிரியர்கள், சந்தேகமடைந்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.அதிர்ச்சியடைந்த பெற்றோர், சித்துார் அரசு மருத்துவமனையில் மாணவியை பரிசோதனைக்காக அனுமதித்தபோது, நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. அறுவை சிகிச்சை வாயிலாக மாணவிக்கு குழந்தை பிறந்தது.
மாணவியின் உடல்நிலை மோசமானதால், உடனடியாக திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்; அங்கு, மாணவி உயிரிழந்தார்.
அடுத்தடுத்த அதிர்ச்சியால் நிலை குலைந்து போன, மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் நிலைமைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.