வேலூர் மயான கொள்ளை விழாவில் நடந்த சோகம்..!
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா இன்று (மார்ச் 9) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இத்திருவிழாவையொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு, காட்பாடி, வேலப்பாடி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
ஊர்வலத்தின் பின்னால், பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகர், அங்காள பரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் வேடமிட்டுச் சென்றனர். சிலர் கையில் சூலாயுதம் ஏந்தி ஆக்ரோஷமாகச் சென்றனர்.
ஊர்வலத்தில் மேள தாளம் முழங்க இளைஞர்களும், சிறுவர்களும் உடன் ஆடிப்பாடிச் சென்றனர். ஆண்கள் பலர் பெண்கள் போன்று வேடம் அணிந்தும், சிலர் எலும்புத் துண்டுகளை வாயில் கவ்விய படியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்தபடியும் ஊர்வலத்தில் சென்றனர்.
இந்நிலையில் மயான கொள்ளை திருவிழாவின் போது தேர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 60 அடி உயரம் கொண்ட 3 தேர்களில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊர்வலம் வந்தார். 3 தேர்களும் திரும்பும் சமயத்தில் மோட்டூர் வெண்மணி நகரை சேர்ந்த தேர் சரிந்து விழுந்தது. இதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலாற்றில் டிராக்டர் மூலமாக தேர் திரும்பும் போது மணலால் நிலை தடுமாறி தேர் கீழே சரிந்து விழுந்ததாகவும், விழா முடியும் தருணத்தில், பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.