சோகம்! ரயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு!!

கோவையில் ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் நவக்கரையை அடுத்த மாவுதம்பதி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று இரவு 9.05 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானையும் 12 முதல் 15 வயது மதிக்கதக்க இரு பெண்யானை என மூன்று பெண் யானைகள் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றன.
அப்போது மங்களூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது மோதியது. இதில் 3 பெண் யானைகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
யானைகள் மீது ரயில் மோதிய சம்பவம் குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினரும், ரயில்வே ஊழியர்களும் விரைந்தனர்.
ஓரே நேரத்தில் ரயில் மோதி 3 பெண் காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில் இந்த விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் யானைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே வாளையார், மதுக்கரை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இங்கு ரயில்களை குறைவான வேகத்தில் இயக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் வனத்தையொட்டிய இந்த பகுதிகளில் ரயில் வேகமாக சென்றதே யானைகளின் உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகின்றது.
newstm.in