நாடு முழுவதும் நாளை முதல் போக்குவரத்து விதிகளில் மாற்றம்..!

சமீபகாலமாக விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்குபவர்களால் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது. சில விபத்துகளால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னதாக புணேவில் சொகுசு காரை மதுபோதையில் ஓட்டிய சிறுவனால் இருவர் உயிரிழந்தது, நாடு முழுவதும் பேசு பொருளாகியது.
இந்த நிலையில், போக்குவரத்து விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை மத்திய போக்குவரத்துத் துறை கொண்டுவந்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளது. 18 வயது நிரம்பாத சிறார்கள் எவ்வித வாகனத்தை ஓட்டினாலும், வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். மேலும், அந்த சிறுவர் 25 வயது நிரம்பும் வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படும்.
அதேபோல், ஓட்டுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகம் செல்வதற்கு பதிலாக தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயின்று தேர்வெழுதி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுநர் உரிமம் தேர்வு நடத்த விருப்புவோர் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். நான்கு சக்கர பயிற்சிப் பள்ளிகள் 2 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.