நாளை முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அண்ணாசாலை, ராயப்பேட்டை ஜி.பி. சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆக.27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி ராயப்பேட்டை வெஸ்ட் காட் சாலையில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள், கனரக வாகனங்கள், இதர வணிக வாகனங்கள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே திருப்பி விடப்படும். இந்த வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம். இந்த வாகனங்கள் ஜி.பி. சாலை வழியாக அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் வழக்கம் போல் ஜி.பி. சாலை வழியாக அண்ணா சாலைக்குச் செல்லலாம்.
ஜி.பி. சாலை வழியாக அண்ணா சாலைக்கு அனுமதிக்கப்படும் இரு சக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் வலது பக்கம் திரும்பி டேம்ஸ் சாலை வழியாகச் செல்ல அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள் இடது பக்கம் திரும்பி ஸ்பென்சா் சந்திப்பில் 'யு' திருப்பம் செய்து, அண்ணா சாலை, டேம்ஸ் சாலை வழியாகச் செல்லலாம். அண்ணா சாலை - வாலாஜா சந்திப்பு - அண்ணா சிலையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம்போல் ஜி.பி. சாலையில் அனுமதிக்கப்பட்டு, ராயப்பேட்டை மணிக் கூண்டு வழியாக செல்லலாம். ஸ்பென்சா் சந்திப்பில் இருந்து ஜி.பி. சாலையை நோக்கி வரும் வாகனங்கள், டேம்ஸ் சாலை, பிளாக்கா்ஸ் சாலை வழியாகச் சென்று ஜி.பி. சாலையை அடையலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.