1. Home
  2. தமிழ்நாடு

9 ஆண்டுகளுக்குப் பின் இந்த அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..!

1

 பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் காரையார் அணைக்கு மேலே இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிக்குள் பிரசித்தி பெற்ற பாணதீர்த்தம் அருவி உள்ளது. பாண தீர்த்தத்தை சிலர் வான தீர்த்தம் என்றும் அழைக்கிறார்கள். ராமன் தனது தந்தையான தசரதருக்கு இங்கேதான் இறுதிச் சடங்கு செய்து திதி கொடுத்ததாக புராணங்கள் வாயிலாக தெரிகிறது. அகத்தியரும் கூட இங்கேதான் நீராடியதாகவும் அங்கு ஓர் சொல் வழக்கு இன்றளவும் நிலவுகிறது. இதன் காரணமாகவே பின்நாட்களில் வான தீர்த்தம், பாண தீர்த்தம் என்று அழைக்கப்பெற்றுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைவன காடுகளில் சிறுசிறு நீர்த்துளிகளாக சேகரமாகி காடுகளின் ஊடாக ஓட் காட்டாற்று வெள்ளமாக நீர் பாயும் இடம்தான் பாணதீர்த்தம். காட்டில் உள்ள மூலிகை செடி, மரங்களில் உரசிவந்து பாணதீர்த்தமாக கொட்டுவதால் என்னவோ இங்கே நீராடினால் நீண்ட நாட்களாக தீராத நோயும் விட்டு ஓடிவிடுகிறது என்கின்றனர் உள்ளூர் வாசிகள்.

இந்த அருவிக்கு மேலும் பெருமை சேர்க்கும் விசயம் தாமிரபரணியின் தோற்றம் இங்கேதான் துவங்குகிறது. இங்கிருந்து காரையாறு அணையில் தேங்கி, மலையில் பயணித்து பாபநாசத்தை அடைகிறது. அங்கிருந்து குறிஞ்சியிலும் முல்லையிலும் பாய்ந்த தாமிரபரணி அடுத்ததாக விவசாய நிலங்களான மருதத்துக்குள் நுழைகிறது.

panartheertham

பார்ப்பதற்கு மலைகல் சூழ ரம்மியமான அழகைக் கொண்டுள்ள பாண தீர்த்தம் அருவி ஆளைவிழுங்கும் ஆபத்தையும் கொண்டுள்ளது. கனத்த மலைக்காலத்தில் இங்கே செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கோடை உள்ளிட்ட பிற நாட்களில் சென்றால் முழு அழகையும் ரசித்து வரலாம்.

இந்த அருக்கு காரையார் அணை வழியாக படகு சவாரி மூலமாக சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பாதுகாப்பு உள்பட பல்வேறு காரணங்களாலும் வனத்துறையின் நெருக்கடியாலும் சுற்றுலா பயணிகள் பாணத்தீர்த்த அருவிக்கு செல்ல சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் திடீரென தடை விதிக்கப்பட்டது.

இதனால் படகு சவாரிக்காக அணையில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து படகுகளும் அணையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இது பயணிகளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. எனவே மீண்டும் பாணத்தீர்த்த அருவிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் கடந்த 18-ம் தேதி முதல் அருவியை காண மட்டும் வனத்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

panartheertham

பாணதீர்த்தம் அருவியை சுற்றுலா பயணிகள் காண்பதற்கு ஏதுவாக 10 இருக்கைகள் கொண்ட காரில் நபர் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் நுழைவு சீட்டு முண்டந்துறை வனச்சரகத்தில் பெற்றுக் கொண்டு, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிடுவதற்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில் முண்டந்துறை வனச்சரகர் கல்யாணி சுற்றுலாப் பயணிகள் முன்பதிவுக்கு தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளார்.

அதன்படி 04634-211994 என்ற தொலைபேசி எண்ணில் சுற்றுலாப் பயணிகள்அனுமதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.படகில் சென்று பார்ப்பதற்கு அனுமதி இல்லை. அதேசமயம், அருவிக்கு அருகில் செல்லவோ அருவியில் குளிக்கவோ தொடர்ந்து தடை நீடிக்கிறது.

Trending News

Latest News

You May Like