சுற்றுலாப் பயணிகள் ஆனந்தம்.. இன்று முதல் மீண்டும் அனுமதி !
குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி. ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அதனை பார்ப்பவர்களுக்கு ஆனந்தமாக குளியல்போட ஆசை துண்டும்.
ஆனால், கொரோனா விதிமுறை காரணமாக நீண்ட மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளித்துச் சென்றனர்.
ஆங்கில புத்தாண்டு தினத்தில் அருவிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க கூடும் என்பதாலும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் அச்சம் காரணமாகவும் கடந்த கடந்த டிசம்பர் 31 முதல் நேற்று வரை மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் அந்த தடை நீங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குற்றால அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் காலை முதலே சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் நீராடினர். நேற்றும் நேற்று முன்தினமும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மிதமான மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது.
newstm.in