ஒகேனக்கல் மற்றும் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு விடுமுறை நாட்களிலும் வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
நேற்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
குளிப்பதற்காக விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியதால், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நேற்று முதலே சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
மேலும், பள்ளி, கல்லூரிகள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கினர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும் அருவி மற்றும் ஆற்றுபகுதிகளில் குளித்தும். மீன் சமையலை உண்டும் ருசித்தும் மகிழ்ந்தனர். மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் ஓட்டியும் மகிழ்ந்தனர்.
அதே போல் கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் குடும்பத்தோடு சுற்றுலா வந்தவர்கள் ஏரியில் படகு சவாரி செய்தும், காட்சிமுனை பகுதியில் பள்ளத்தாக்கின் இயற்கை அழகையும், மலை முகடுகளில் தவழ்ந்து சென்ற மேகக் கூட்டங்களையும் ரசித்தபடி சுற்றுலா பயணிகள் விடுமுறையை கழித்தனர்.
இதேபோல், அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகள் மிகுதியாக காணப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்பட ஏற்காட்டில் கடைகள் பலவற்றிலும் விற்பனை களைகட்டியது