1. Home
  2. தமிழ்நாடு

கொடைக்கானலில் உள்ள இந்த பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அதிரடி தடை..!

1

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுகிறது. 100 முதல் 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பல இடங்களில் பதிவாகி வருகிறது. இதனால் வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் மக்கள் பலர் கோடைவாசல் தலங்களை நோக்கி படை எடுக்கிறார்கள்.

கொடைக்கானலை பொறுத்தவரை பெரிய அளவில் கோடை மழை இன்னமும் ஆரம்பிக்கவில்லை.. வழக்கமாக கோடைமழை சித்திரை பிறந்தது முதலே பெய்யும். வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்வது இயல்பு.. ஆனால் கொடைக்கானலில் இன்னமும் பெரிய அளவில் மழை இல்லை.. இதனால் கொடைக்கானலை ஒட்டிய பகுதியில் உள்ள மக்கள் அங்கு அவதிப்பட்டு வருகிறார்கள்... வெயிலும் கடுமையாக உள்ளதால் வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.

கொடைக்கானலின் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, கூக்கால், பாரிகோம்பை, வெம்படி, சந்தனப்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது, வனத்துறையினர் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக வனத்துறை, தீயணைப்புத்துறையினரின் வாகனங்கள், தண்ணீர் டேங்கர் லாரிகள், தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆனால் ஆள் பற்றாக்குறை மற்றும் கடுமையான வறட்சி காரணமாக பணிகள் அங்கு பெரும் சவாலாக உள்ளது, ஹெலிகாப்டர்களில் சென்று காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றால் ஓரளவு பயனுள்ளதாக இருக்கும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதையொட்டி பூம்பாறை சந்திப்பு முதல் மன்னவனூர் மற்றும் கூக்கால் சாலைகளில் சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே காட்டுத்தீயை அணைக்கும் பணி அந்த பகுதிகளில் இன்றும் தொடர்ந்து நடக்கிறது. எனவே இன்றும் மேற்கண்ட பகுதியில் சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உள்ளூர் மக்களின் வாகனங்களுக்கு தடையில்லை.

Trending News

Latest News

You May Like