சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..! கொடைக்கானலில் முதல் முறையாக கண்கவர் ராட்சத காற்றாடி திருவிழா..!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். மேலும், பல்வேறு சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.தற்போது, கோடை காலம், பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகளில் வருவர் என்பதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது. இதேபோல, பொதுமக்கள் கண்டு கழிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், ஒன்றாக கொடைக்கானல், மன்னவனூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் முறையாக கண்கவர் ராட்சத காற்றாடி திருவிழா இன்று (மே 22) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர்.
இந்த திருவிழாவில் சுமார் 20 அடி முதல் 80 அடி வரை உயரம் கொண்ட ராட்சத காற்றாடிகள் வானில் பறக்க விடப்பட்டன. இதில், இந்திய தேசியக் கொடி, மலர், டிராகன், பஞ்சவர்ணக்கிளி. பொம்மைகள் ஆகியவற்றி உருவம் கொண்ட 40 வகையான காற்றாடிகள் வானில் பறக்க விடப்பட்டன. இந்த திருவிழாவினது இன்று (மே 22) முதல் வரும் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், நாங்கள் குடும்பத்தோடு கோடை விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலாவாக கொடைக்கானலுக்கு வந்தோம். அப்போது, மன்னவனூருக்கு வந்தபோது காற்றாடி திருவிழா நடைபெற்றது.
இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இங்கு தான் முதல் முறையாக ராட்சத காற்றாடி திருவிழாவை பார்க்கிறோம். அதுவும் இந்த ஏரியையொட்டிய பகுதியில் காற்றாடி பறப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது என்று தெரிவித்தனர்.