1. Home
  2. தமிழ்நாடு

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..! விவேகானந்தர் பாறைக்கு காலையில் அனுமதிச்சாங்க... மதியம் அனுமதிக்கலை..!

1

கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் மோடி சுமார் 45 மணி நேரம் அமர்ந்து தியானம் செய்கிறார். நேற்று மாலை தனது தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி, நாளை பிற்பகல் வரை தியானத்தை தொடர்கிறார். இதன் காரணமாக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து 5 மணி நேரம் தியானம், அதன் பிறகு சிறிது ஓய்வு என நாளை மாலை வரை 45 மணி நேரத்துக்கு தொடர் தியானத்தை பிரதமர் மேற்கொள்கிறார். 5 மணி நேரத்துக்கு ஒருமுறை எடுக்கும் ஓய்வைத் தவிர, பிரதமர் தூங்கப் போவதில்லை. ஓய்வு சமயத்தில் இளநீர், பழச்சாறு மட்டும் அருந்துகிறார்.

நாளை (1-ம் தேதி) மாலை 4 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், படகு மூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் கடல், வான் மற்றும் தரைவழியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடலில் உள்ள விவேகானந்தர் பாறையின் 3 கி.மீ. சுற்றளவுக்கு படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், இந்தப் பாறைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது. மெரைன் போலீஸாரும், கமாண்டோ நீச்சல் வீரர்களும் இரவும், பகலும் ரப்பர் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, இந்திய விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர்களில் வான்வழி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,  இன்று காலை விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அந்த நேரத்தில், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அமைந்துள்ள கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர், சூரிய உதயம் பார்ப்பதற்கு மட்டும் தீவிர சோதனைக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.அதே சமயம், செல்போன்கள் மூலம் வீடியோ எடுக்கவும் கேமரா கொண்டு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 11.30 மணிக்கு மேல் விவேகானந்தர் பாறையில் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் அனுமதி அளித்து வந்த நிலையில் திடீர் வெளியேற்றத்தால் சுற்றுலா பயணிகள் குழம்பி உள்ளனர்.பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிப் பார்க்க உள்ளதால் பொதுமக்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விவேகானந்தர் பாறைக்கு இன்று காலை முதல் நடந்து வந்த சுற்றுலா படகு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like