ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்திற்கு கடந்த 7 மாதத்திற்கு பின்பு, சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக விலக்கப்பட்டு வரும் நிலையில், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதே போன்று வடதமிழகத்தில் புகழ்பெற்ற ஓகேனக்கலுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சீசன் காலத்தில் ஓகேனக்கல் பகுதிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஓகேனக்கல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவிப்பகுதிகள் சுற்றுலா பயணிகள் இன்றி காணப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஓகேனக்கல் அருவிக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதன் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒவ்வொரு சீசன் காலத்தில் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும். ஆனால் அந்த வருவாய் கொரோனா தடை காரணமாக தடை பட்டிருந்தது. தற்போது தடை நீக்கப்பட்டு ஒகேனக்கல் அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி கூறுகையில், ஒகேனக்கல் பகுதியில் கோத்திக்கள் என்னும் இடத்தில் பரிசல் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மெயினருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை கண்காணிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.