சிறுமி உதட்டை தொடுவது பாலியல் குற்றம் ஆகாது - டெல்லி ஐகோர்ட்..!

டெல்லியில் 12 வயது சிறுமி, இவரை 4 வயதிலேயே இவரது தாயார் விட்டுச் சென்றுவிட்டார். இந்த நிலையில் தனது பாட்டி வீட்டிற்கு 4 நாட்கள் விடுமுறைக்காக சென்ற போது தந்தை வழியை சேர்ந்த உறவினர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் அந்த சிறுமியின் உதட்டை அழுத்தியதுடன் அருகே படுத்து உறங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் நோக்கத்துடன் அவரின் உதட்டை அழுத்தியதாகவும் அவருடன் படுத்து உறங்கியதாகவும் போக்சோ சட்டத்தின் கீழ் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இதை எதிர்த்து சிறுமியின் உறவினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வர்ணா காந்த ஷர்மா விசாரித்தார். அப்போது 354 பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ததை உறுதி செய்தார்.
அதே வேளையில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான குற்றச்சாட்டில் இருந்து அந்த உறவினரை விடுவித்தும் உத்தரவிட்டார். இதனால் எதிர் தரப்பினர் அதிர்ச்சி அடைந்த போது நீதிபதி கூறுகையில், ஒரு பெண் குழந்தையின் உதடுகளைத் தொட்டு அழுத்தும் செயல், இந்திய தண்டனை சட்டம் 354 -ன் கீழ் குற்ற வரம்பிற்குள் வருகிறது.
குறைந்தபட்ச தொடுதல் இருந்தாலே இந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும். அதே நேரம் போக்சோ சட்டப்பிரிவு 10 இன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றால் பாலியல் நோக்கத்துடன் அந்த உறவினர் சிறுமியை அணுகியிருக்க வேண்டும்.
ஆனால் அவர் அப்படி நடந்து கொண்டதாக சிறுமி தனது புகாரில் எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை. பாலியல் நோக்கமின்றி சிறுமியின் உதட்டை அழுத்துவது, அருகில் படுத்து உறங்குவது வன்கொடுமை இல்லை. எனவே அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை (போக்சோ) வழக்கு பதிவு செய்ய முடியாது.
இது போன்ற உணர்வுப்பூர்வமான வழக்குகளை விசாரிக்கும் போது விசாரணை நீதிமன்றம் அதிக கவனம் கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமாக ஏனோதானோவென 4 வரிகளில் எல்லாம் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதி கடிந்து கொண்டார்.
சிறுமி உதட்டை தொடுவது போக்சோ குற்றமில்லை என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது