பெண்களின் மார்பகத்தை தொடுவது குற்றமல்ல... அலகாபாத் நீதிமன்றத்தின் சர்ச்சை தீர்ப்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்..!

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி வழங்கிய சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அலகாபாத் நீதிபதி விதித்த வழங்கி சர்ச்சை தீர்ப்பை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. போதிய சென்சிட்டிவிட்டி இல்லாமல் எழுதப்பட்ட அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு எனவும் உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.
நாட்டின் தீவிரமான பிரச்சனைகள் முற்றிலும் உணர்வு பூர்வமற்ற வகையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி இப்பபடி ஒரு தீர்ப்பை எழுதி இருப்பதாகவும் சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரம் மனித தன்மையற்ற வகையில் அணுகப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் கடினமான வார்த்தையை பயன்படுத்தியதற்கு வருந்துவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து இப்படி ஒரு தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த 11 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு லிஃப்ட் தருவதாக அழைத்து சென்ற இளைஞர்கள், அவரது மார்பை அழுத்தி, சுடிதார் பேண்ட்டை அவிழ்த்து, சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி கூச்சலிடவே மக்கள் திரண்டனர். இதையடுத்து அந்த சிறுமியை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர்கள் மீது ஐ.பி.சி பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), போக்சோ சட்டப்பிரிவு 18-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா வழங்கிய தீர்ப்புதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் அளித்த தீர்ப்பில், "பெண் மார்பை அழுத்தினர், ஆடையை அவிழ்த்தனர் என குற்றம்சாட்டியுள்ளனர். இதெல்லாம் பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யத் திட்டமிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. சிறுமி நிர்வாணமாக்கப்படவில்லை, இளைஞர்களும் ஆடை இல்லாமல் இருந்தார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லை. எனவே இது வெறும் பாலியல் சீண்டல்தான்" என தெரிவித்திருந்தார் நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா. இதைத்தான் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளுத்து வாங்கியுள்ளனர்.