குவைத்தில் சித்திரவதை...! நான் இங்கே சித்திரவதைக்கு ஆளாகியுள்ளேன்..! ஆந்திர பெண் வீடியோ வெளியீடு!
ஆந்திரப் பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதுடன், அதற்காக இந்திய அரசு உதவ வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். நான் இங்கே சித்திரவதைக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி கணவர் உள்ளனர். நான் அவர்களைக் காப்பாற்றுவதற்காக குவைத் வந்தேன். ஆனால் நான் இங்கே சித்திரவதைக்கு ஆளாகியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”என்னை முதலாளி அறையில் பூட்டி வைத்திருப்பதுடன், உணவும் வழங்கப்படவில்லை. இதனால் என் உடல்நிலை மோசமாகி உள்ளது. நான், தற்போது வீட்டுக் காவலில் உள்ளேன். என்னுடைய இந்த வேலைக்கான பயணத்தை ஏற்பாடு செய்த முகவர், என்னை மிரட்டியதுடன் போனில் பேசுவதற்கான வசதியையும் தடைசெய்து வைத்துள்ளார். இதனால் குடும்பம் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு எந்த வழியும் இல்லை. ஆகவே ஐயா என்னை காப்பாற்றுங்கள்” என ஆந்திர அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
வீடியோவில் பேசிய அந்தப் பெண், அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா என தெரிய வந்துள்ளது. அவரது கோரிக்கைக்கேற்ப ராம் பிரசாத் ரெட்டி, மத்திய அமைச்சர் கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். ’கவிதா, இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்ப இந்திய அரசு உதவ உறுதிசெய்ய வேண்டும்’ என ரெட்டி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
https://t.co/5CEQlzhpJk pic.twitter.com/BRnglKSgNu
— Mandipalli Ramprasad Reddy (@ramprasadreddy_) September 12, 2024