1. Home
  2. தமிழ்நாடு

நாளை ஆடி அமாவாசை : தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நல்ல நேரம் இதோ..!

1

ஆடி அமாவாசை இந்த வருடம் நாளை  ஜூலை 24ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்று புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்கலாம். நீர் நிலைகளுக்கு சென்று, அந்தணர்களை வைத்து தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே எளிமையாக எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம். இதனால் பித்ரு தோஷம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

இந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி அதிகாலை 03.06 மணிக்கு துவங்கி, ஜூலை 25 ம் தேதி அதிகாலை 01.48 வரை அமாவாசை திதி உள்ளது. இருந்தாலும் ராகு காலம், எமகண்டத்தில் திதி, தர்ப்பணம் கொடுக்க கூடாது. சூரிய உதயத்திற்கு முன்பும், பகலில் உச்சிவேளைக்கு பிறகும் திதி, தர்ப்பணம் கொடுக்கக் கூடாது என்பது நியதி. ஜூலை 24ம் தேதி வியாழக்கிழமை என்பது காலை 6 முதல் 07.30 மணி வரை எமகண்டமும், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும் உள்ளது. இதனால் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை 07.35 மணிக்கு பிறகு, பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் கொடுக்கலாம்.

அதே போல் ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆடி அமாவாசை அன்று தானம் கொடுப்பது, காகத்திற்கு உணவு அளிப்பது போன்ற செயல்கள் முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும். இதனால் குடும்பத்தில் நன்மை உண்டாகும். அன்றைய தினம் முன்னோர்களுக்கு திதி கொடுத்த பிறகே வழக்கமான இறை வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். பகலில் முன்னோர்களுக்கு இலை போட்டு படையல் வைத்து வழிபடுபவர்கள் பகல் 01.25 மணிக்கு முன்பாக படையல் போட்டு, விரதத்தை நிறைவு செய்து விடலாம்.

அன்றைய தினம் யாராவது ஒருவருக்காவது அன்னதானம் வழங்குவது சிறப்பு. அதே போல் வீடு தேடி யார் வந்தாலும் அவர்களை உபசரித்து அனுப்ப வேண்டும். முன்னோர்கள் யாரின் வடிவத்திலும் வரலாம் என்பதால் உணவு அளித்து அனுப்புவது நல்லது. யாருக்கும் உணவு அளிக்க முடியாதவர்கள் காகத்திற்கு உணவு அளிக்கலாம். பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, வெல்லம் கலந்த பச்சரிசி ஆகியவற்றை உணவாக அளிக்கலாம். முன்னோர்களுக்கு புதிய துணிகள் வைத்து படைக்கும் வழக்கம் உள்ளவர்கள், அதை வழிபட்ட பிறகு யாராவது வயதானவர்களுக்கு தானமாக அளிக்கலாம்.

Trending News

Latest News

You May Like