1. Home
  2. தமிழ்நாடு

நாளை ரத சப்தமி..! ரத சப்தமியில் செய்ய வேண்டியது என்ன..!

1

ரத சப்தமி என்பது மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். இது சூரிய பகவானை வழிபட்டு, பலவிதமான நலன்களை பெறுவதற்குரிய நாளாகும். இந்த ஆண்டு ரத சப்தமி பிப்ரவரி 04ம் தேதி செவ்வாய் கிழமை வருகிறது. இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்? ஆண்கள், பெண்கள் என்ன செய்தால் செல்வ நிலை உயரும். தொழில் சிறக்கும். பலவிதமான துன்பங்களில் இருந்து விடுபட முடியும். ஆண்கள், பெண்கள், கணவனை இழந்தவர்கள் என யார் வேண்டுமானாலும் ரத சப்தமி நாளில் விரதம் இருந்து வழிபடலாம்.

புராணத்தின் படி, ரிஷி காஷ்யபரின் மனைவி அதிதி கர்ப்பவதியாக இருந்த சமயத்தில் ஒரு நாள் தன்னுடைய கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு, திறந்து பார்த்த போது, அங்கு ஒரு பிராமணர் தனது பசிக்கு உணவு கேட்டு நின்றார். அவரை காத்திருக்க சொல்லி விட்டு, வீட்டிற்குள் சென்ற அதிதி, மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி விட்டு, அவர் சாப்பிட்ட பிறகு மீதம் இருந்த ஆகாரத்தை எடுத்துச் சென்று அந்த பிராமணனுக்கு கொடுத்தாள்.

நேரம் கழித்து வந்து உணவு கொடுத்து தன்னை உதாசீனப்படுத்தியதாக நினைத்த அந்த பிராமணர், "என்னை உதாசீனம் செய்த உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என சாபம் அளித்தார். பிராமணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி, காஷ்யப முனிவரிடம் விஷயத்தை சொல்ல, "நீ வருந்தாதே, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்" என்று வாழ்த்தினார். அதன் படியே, ஒளி பிரகாசமான சூரியன் மகனாக பிறந்தார். சூரியன் அவதரித்த உத்திராயண காலத்தில் வரும் முதல் சப்தமி அன்று ரத சப்தமி கொண்டாடப்படுகிறது. இதை சூரிய ஜெயந்தி என்றும் சொல்லுவது உண்டு.

ரத சப்தமியில் செய்ய வேண்டியது :

ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது திதியான சப்தமியில் சூரியனின் அருளை பெறுவதற்காக விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை என வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். காலை 6.00 மணியிலிருந்து 7.30 மணிக்குள் ஸ்நானம் பண்ண வேண்டும்.

தலையில் வைக்கும் இலையில், பெண்களாக இருந்தால் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையையும், ஆண்களாக இருந்தால் அட்சதையை மட்டும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள்.

ரத சப்தமி பலன்கள் :

இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம். ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும். . ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் மலையப்பர் சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Trending News

Latest News

You May Like