செங்கோட்டையன் தலைமையில் நாளை அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

பர்கூர் ஊராட்சியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் ஆடு, மாடுகளை வனப் பகுதிகளில் மேய்ச்சல் செய்வதும், விவசாயம் செய்வதும் ஆகும். மேலும், வனப் பகுதிகளில் விளையக்கூடிய நெல்லிக் காய், சீமார்புல், கடுக்காய் முதலானவற்றை அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் வனக் குழுவின் மூலமாக, வனப் பகுதிக்குச் சென்று சேகரித்து வந்து அவைகளை விற்பனை செய்து வருமானம் ஈட்டி தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க. அரசு, பர்கூர் மலைப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, அந்தியூர் தாலுகா, பர்கூர் மலைப் பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ள தி.மு.க. அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தின் நாளை 6.7.2023 – வியாழக்கிழமை காலை 11 மணியளவில், அந்தியூர் தொகுதி, பர்கூர் ஊராட்சி, தாமரைகரை என்ற இடத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.