1. Home
  2. தமிழ்நாடு

வெளிச்சந்தையில் தக்காளி விலை ரூ.120 ... பண்ணை பசுமை கடைகளில் 60 ரூபாய்க்கு விற்பனை..!

1

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ள தமிழக அரசு, அவற்றை பண்ணை பசுமைக் கடைகள் மூலம் விற்பனை செய்து  வருகிறது.

கடந்த மாதம் வெறும் 40 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த தக்காளி, கடந்த ஒரு வாரமாகவே விலை உயர்ந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெறும் 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாயை தாண்டி உள்ளது. தற்போதைய சூழலில் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக அதனை வாங்கிச் சென்று வெளியில் சில்லறை விலையில் விற்கும் சிறு வியாபாரிகள் கூடுதல் லாபம் வைத்து 120 முதல் 140 ரூபாய் வரை விற்கின்றனர். இதனால் இல்லத்தரசிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதேபோல், சென்ற மாதம் 20 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம் தற்போது 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே தக்காளி விலை 100 கடந்துள்ள நிலையில், வெங்காயமும் விலை உயர வாய்ப்புள்ளதாக மக்கள் கவலையடைந்துள்ளனர். பெரிய வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி மற்றும் வெங்காயம் விற்பனை நடைபெறுகிறது. கடந்த ஆண்டுகளில் வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றின் விலை உயர்ந்த நிலையில் தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. தற்போதும் விலை உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் தக்காளி 60 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒருவருக்கு அதிகபட்சம் இரண்டு கிலோ வரை விற்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் வெங்காயம் பதுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 

Trending News

Latest News

You May Like