1. Home
  2. தமிழ்நாடு

பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை உள்ளூர் மக்களுக்கு டோல்கேட் கட்டண விலக்கு..!

1

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு நள்ளிரவு (ஜூலை 10) முதல் அமலுக்கு வந்ததால் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த முற்றுகை போராட்டத்தில், உள்ளூர் பொதுமக்கள், அதிமுகவினர் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி முழக்கம் எழுப்பினர். இதனால் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.இதையடுத்து போலீசார் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படாததால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து, காவல் துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் டி. கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி மக்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்ட்டர் முன் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கும் பழைய முறையே தொடரும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறினர். இதையடுத்து, போலீசார் போராட்டக்காரர்களிடமும், சுங்கச்சாவடி நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சுங்கச்சாவடி நிர்வாகம், உள்ளூர் மக்களின் எதிர்ப்புக்கு பணிந்துள்ளது. பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை உள்ளூர் மக்களுக்கு டோல்கேட் கட்டண விலக்கு அளிக்கப்படும் என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி நடந்த முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.திங்கட்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் என சுங்கச்சாவடி நிர்வாகம் வாய்மொழியாக அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like