சுங்க கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு..!
சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு இன்று அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) இந்த உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருடாந்திர சுங்கச் சாவடி கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 5 முதல்10 சதவீதம் வரை இந்த கட்டணம் உயர்த்தப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்து இருந்தது.
அத்தியாவிசய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக அமைந்தது.
மேலும், சுங்கச் சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலிப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. சுங்கச் சாவடிகளை அகற்றவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் என்.எச்.ஏ.ஐ இந்த கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது எனக் கூறப்படுகிறது. இதற்கான உத்தரவை ஆணையம் நேற்று இரவு பிறப்பித்ததாகத் தெரிகிறது. இன்று நாடு முழுவதும் பயணித்தவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இந்த கட்டண உயர்வுக்கு மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் இதனை அமல்படுத்த வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
மேலும், தேர்தல் முடியும் வரை மட்டுமே இந்தக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு கட்டணம் உயராது என்று மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.