1. Home
  2. தமிழ்நாடு

இன்று பட்டமளிப்பு விழா: அமைச்சர் பொன்முடி புறக்கணிக்க முடிவு..!

1

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

சங்கரய்யாவைப் பற்றி கவர்னருக்கு தெரியாவிட்டாலும் கேட்டிருக்க வேண்டும். 9 ஆண்டு காலம் சிறையில் இருந்த சுதந்திர போராட்ட வீரரான ஒருவருக்கு, 102 வயதிலும் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் சங்கரய்யாவுக்கு ஒரு கவுரவ டாக்டர் பட்டம், சிண்டிகேட் மற்றும் செனட் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக கவர்னர் அதற்கு செவி சாய்க்கவில்லை, மறுத்து விட்டார்.

அவர் மறுத்தப் பிறகு, மீண்டும் ஒருமுறை பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட், சென்ட்டில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பல்கலைக் கழகத்தின் விதியே என்னவென்றால், மேற்படி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் அதிகாரம், மதுரை காமராசர் பல்கலைக் கழக ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது சிண்டிகேட், செனட்டுக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது.

தமிழக கவர்னர் எந்த சட்டத்தையும் மதிப்பது இல்லை. திராவிட மாடல், பொருளாதார சமத்துவம், சமூக நீதி குறித்து பேசுபவர்களை கண்டாலே கவர்னருக்கு பிடிப்பதில்லை. அதனால்தான், சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். 

தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் கொடுக்க கவர்னர் மறுப்பதற்கான காரணம் என்ன? ஏன் வழங்கவில்லை என்று கவர்னர் விளக்கத் தயாரா? 

சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யா நீண்ட காலம் இந்த மக்களுக்காக போராடிய ஒருவர். அவருக்கு முதன்முதலாக தகைசால் விருது வழங்கி சிறப்பித்தவர் தமிழக முதல்வர். அந்த விருதின்போது அவருக்கு வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் தொகையைக்கூட, அவர் பெற்றுக் கொள்ளவில்லை. 

இந்தத் தொகையில் ஏழை மக்களுக்கு உதவுங்கள் என்று கூறிய சங்கரய்யாவுக்கு, கவர்னர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மறுக்கிறார் என்றால், இவரை என்னவென்று கூறுவது? திராவிட மாடல் அரசின் முதல்வர் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று கவர்னர் கூறுகிறார். 

சுதந்திரப் போராட்ட வீரர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் உதவுவதுதான் தமிழகத்தில் உள்ள திராவிட மாடல் ஆட்சி.  சுதந்திப் போராட்ட தியாகிகள் மீது கவர்னருக்கு அக்கறை இருந்தால் கொடுக்க வேண்டாமா? ஏன் கொடுக்கவில்லை?

இது தொடர்பாக இரண்டு முறை வேண்டுகோள் கொடுத்தேன். ஆனால், எதையும் அவர் செவிகளில் ஏற்கவில்லை.  சுதந்திரப் போராட்ட வீரரும், பொதுவுடைமைவாதியுமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்க மறுக்கும் கவர்னரைப் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு எதிரான எதிரிகள் இருக்க முடியாது. 

காரணம், கவர்னர் அந்த காலத்தில் இருந்தே ஆர்எஸ்எஸ்ஸில் இருந்தவர்.அவர்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேல் மதிப்பு கிடையாது. காந்தியடிகளையே வேண்டாம் என்று கூறியவர்கள். அந்த இயக்கத்தில் இருந்து வந்தவர் கவர்னர். அதனால்தான் அப்படி பேசுகிறார்.

கவர்னரின் செயல்கள், பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. எனவே, சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக் கழகம் பரிந்துரைத்த பிறகும் கவர்னர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து, இன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like