இன்று ஆவணி அவிட்டம் : இன்று இதை மறக்காம செய்யுங்க வாழ்க்கையில் மாற்றம் வரும்..!
பௌர்ணமி நாளும், அவிட்டம் நட்சத்திரமும் ஆவணி மாதத்தில் இணைந்து வருவதே ஆவணி அவிட்டம் ஆகும். இந்த நாள் ஆவணி மாதத்திலே மிகவும் முக்கியமான நாள் ஆகும். இந்த நன்னாளில்தான் வேதங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது.
ஆவணி அவிட்டம் என்று சொன்னாலே, பலருக்கும் இது பூணூல் மாற்றும் ஒரு நிகழ்வு என்று தான் முதலில் நினைவுக்கு வரும். பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், விடியற்காலையிலேயே குளித்து நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இது பூணூல் மாற்றும் சடங்கு என்பது மட்டுமல்லாமல் ஆவணி அவிட்டத்திற்கு பல்வேறு முக்கியத்துவம் உள்ளன. உபகர்மா என்று கூறப்படும் இந்த நிகழ்வு பிராமணர் சமூகத்தில் கல்வி கற்பதை தொடங்குவதற்கான ஒரு முக்கியமான நாளாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒருசில சமூகங்களில் பூணூல் அணிந்தவர்கள் தான் கர்மகாரியம், அதாவது திதி கொடுப்பது, தெவசம் செய்வது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்ற வழக்கமும் இருக்கிறது.
ஆவணி அவிட்டம் என்ற பேரிலேயே இந்த நிகழ்வு எந்த மாதம் எந்த நாளன்று வரும் என்பது தெரிந்து விடுகிறது. தமிழ் மாதங்களின் அடிப்படையில், சூரியன், சிம்ம ராசியில் ஆட்சி பெற்று அமரும் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில், அவிட்ட நட்சத்திர நாளன்று பூணூல் மாற்றிக் கொள்வார்கள். இந்த நாள் பெரும்பாலும் பௌர்ணமியன்று வரும். இந்த நாளை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடுகிறார்கள்.
ஆகஸ்ட் 08ம் தேதி பகல் 02.12 மணிக்கு துவங்கி, ஆகஸ்டெ 09ம் தேதி பகல் 01.25 மணிக்கு பெளர்ணமி திதி நிறைவடைகிறது. அன்று சூரியஉதய நேரமாக காலை 06.04 மணியும், சூரிய அஸ்தமன நேரமாக மாலை 06.59 மணியும் சொல்லப்பட்டுள்ளது. ஆவணி அவிட்டம் நாளில் பிராமணர்கள் பூணூல் மாற்றிக் கொண்டு, வேதங்களை கற்க துவங்குவதால், வேத, சாஸ்திரங்களை துவக்குவதற்குரிய நாளாக இந்த நாள் சொல்லப்படுகிறது. அதே போல், பிரம்மாவிடம் இருந்து அசுரர்கள் திருடிய நான்கு வேதங்களையும் கடலுக்கு அடியில் இருந்து மீட்டுக் கொடுத்தவர் ஹயக்ரீவர் தான். ஹயக்ரீவர், மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவராக இல்லாத போதிலும் ஞானம், செல்வத்தை அருளும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரது அவதார திருநாளும் ஆவணி அவிட்டம் அன்று அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
ஆவணி அவிட்டம் அன்று செய்ய வேண்டியது:
அதிகாலையில் எழுந்து புனித நீராடி விட்டு, சந்தியாவந்தனம் மற்றும் காமோகர்ஷித ஜபம் என்ற மந்திரத்தை ஜபிப்பார்கள். அதாவது, கடந்த காலங்களில் வேத மந்திரங்களை பாராயணம் செய்யும் போது ஏதாவது தவறு செய்திருப்பதால் அதற்காக மன்னிப்பு கேட்பதாகும். பூணூல் மாற்றிக் கொண்டு, பெரியர்கள் அல்லது குருமார்கள் மூலமாக வேத மந்திரங்களை கற்க துவங்குவார்கள். பிற்பகல் வரை இது நடைபெறும். பிற்பகலுக்கு பிறகு பித்ரு தர்ப்பணம் செய்து, எள்ளும் தண்ணீரும் வழங்குவார்கள். பிறகு 108 முறை காமோகர்ஷித மந்திரத்தை உச்சரித்து ஹோமம் நடத்துவார்கள்.
ஆவணி அவிட்டம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் முக்கிய வழிபாட்டு நாளாகும். இந்தியாவின் பல பகுதிகளிலும் பல பெயர்களில் இந்த சடங்குகள் மேற்கொள்ளப்படுகிறது. பிராமண சிறுவர்களுக்கு, உபாகர்மா எனப்படும் முதல் முறையாக பூணூல் அணிந்து, அவர்களின் ஆன்மிக பயணத்தை துவக்கும் சடங்காக இது அமைகிறது. இதே போல் பல மாநிலங்களிலும் பல பெயர்களில் ஆவணி அவிட்டம் சடங்குகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆண்டு ஆவணி அவிட்டம் நாளில் ஹயக்ரீவர் ஜெயந்தியும், பெளர்ணமியும் இணைந்து வருவதால் இந்த நாளில் ஹயக்ரீவர் வழிபாடும், அம்பிகை மற்றும் பெருமாளின் வழிபாடு சிறப்பு தரும். பெளர்ணமி என்பதால் குல தெய்வத்தையும், முன்னோர்களையும் வழிபடுவதும், சத்ய நாராயண பூஜை செய்து வழிபடுவது சிறப்பானதாகும்.
.png)