1. Home
  2. தமிழ்நாடு

இன்று த.வெ.க. முதல் மாநாடு : முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் விஜய்..!

1

இன்று நடக்கவிருக்கும் விக்கிரவாண்டி மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை நடிகர் விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரம் மாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டுஉள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முதல் முறையாக மக்கள் மத்தியில் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு மக்கள் மத்தியில் நேரடியாக அவரை பார்க்கும் ஆர்வமும், அவரது பேச்சை கேட்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. 

ஆனால் அவர் இதுவரை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவது போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். இவை அனைத்தும் அரங்க நிகழ்ச்சிகளால் நடந்து இருக்கிறது.

இப்போதுதான் முதல் முறையாக பொதுமக்கள் மத்தியில் விஜய் உரையாற்றப் போகிறார். எனவே இந்த மாநாடு மற்றும் அவரது பேச்சு பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தனது கட்சியின் கொள்கைகள், கட்சி கொடியின் நிறம் பற்றிய விளக்கம் மற்றும் எதிர்கால செயல்திட்டம், 2026 தேர்தல் பற்றியும் அறிவிக்கப் போவதாக கூறி உள்ளார். எனவே இன்று அவர் அறிவிக்கப் போவதுதான் கட்சியை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் என்பதால் பொதுமக்களையும், பல்வேறு அரசியல் கட்சியினரையும் உற்றுநோக்க வைத்துள்ளது.

இன்று காலையில் இருந்தே தொண்டர்கள் வந்து குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விக்கிரவாண்டியில் கடுமையான வெயில் அடிப்பதால் தாராளமாக குடி தண்ணீர் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இன்று மாலை 3 மணி அளவில் மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 4 மணியளவில் மாநாட்டு திடல் முன்பு தங்கியிருக்கும் வீட்டில் இருந்து விஜய் தனிப்பாதை வழியாக மாநாட்டு மேடைக்கு அழைத்து வரப்படுகிறார். 

அப்போது மேடையில் கட்சி பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மேடைக்கு வந்ததும் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். இதையடுத்து மாநாடு தொடங்குகிறது. வரவேற்புரை முடிந்ததும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு பற்றிய விளக்க உரையாற்றுகிறார்.

அதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிறப்புரையாற்ற உள்ளார். அவரது உரை மாநாட்டு எழுச்சி உரையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சுமார் ஒரு மணி நேரம் பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் பேச்சின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் தமிழக வெற்றிக் கழக முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். முக்கிய அறிவிப்புகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், எதிர்கால லட்சியங்கள், திட்டங்களையும் விஜய் தொண்டர்களிடம் விளக்கமாக எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் பேச்சை தொண்டர்கள் முழுமையாக கேட்க வேண்டும் என்பதற்காக மாநாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாநாட்டின் கடைசி வரிசையில் இருப்பவர்களுக்கும் அவரது பேச்சு கேட்க வேண்டும் என்பதற்காக 175 அடி அகலத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களும் தன்னை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக மேடையின் முன்பு இருந்து மக்கள் கூட்டத்தின் நடுவில் 800 மீட்டர் தூரத்துக்கு பிரத்யேக நடைமேடை அமைக்கப்பட்டுஉள்ளது.

அந்த நடைமேடையில் நடந்த படியும் அவர் பேச ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. அப்போது அவர் மீது லேசர் ஒளிக்கற்றைகள் விழவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like