இன்று 44 இடங்களில் குரூப்-1, குரூப்-1ஏ முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலியிடங்கள் உள்ளன.
காலியாக உள்ள 28 துணை ஆட்சியா்கள், 7 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 19 வணிகவரி உதவி ஆணையா், 7 ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், 6 தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் என 70 காலிப் பணியிடங்களுக்கும், குரூப் 1 ஏ பிரிவில் 2 உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் பணியிடங்களுக்கும் முதல் நிலை தோ்வு இன்று நடைபெறுகிறது.
இந்த பதவிகளுக்கு 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேர், குரூப்-1 ஏ பதவிக்கு 6 ஆயிரத்து 465 பேர், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பதவிக்கு 14 ஆயிரத்து 849 பேர் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு இன்று (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது.
தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபடுகிறார்கள். சென்னையில் 170 மையங்களில் தேர்வானது நடைபெறுகிறது.
இதற்கிடையே டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு காரணமாக இன்று (ஜூன் 15ம் தேதி) நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மாற்றுத் தேதிகள் www.ideunom.ac.in இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று அறிக்கையின் வாயிலாக சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.