இன்று இம்மானுவேல் சேகரனின் 66 ஆம் ஆண்டு நினைவு தினம் : ராமநாதபுரத்தில் போலீஸ் குவிப்பு!
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி நகர் கொண்டு வரப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி இம்மானுவேல் சேகரனின் 66 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.தமிழக அரசு சார்பில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.
இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு:
3 டிஐஜிகள், 25 போலீஸ் சூப்பிரண்டுகள், 31 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 71 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 124 காவல் ஆய்வாளர்கள் என 6,526போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்று கண்டறியப்பட்ட 161 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் 137 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
இம்மானுவேல் சேகரன் நினைவிடம், பேருந்து நிலையம், ஐந்து முனை, சந்தை திடல் உள்ளிட்ட 25 இடங்களில் 115 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தவிர மாவட்டம் முழுவதும் 67 இடங்களில் வீடியோ கேமரா மூலம் வாகனங்களில் வருபவர்கள், வாகனங்களில் இருப்பவர்கள் பதிவு செய்து கண்காணிக்கப்பட உள்ளனர். மேலும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் நிரந்தர புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நினைவிடம் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் 7 ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மதுரை ராமநாதபுரம் நான்கு வழி சாலை உட்பட மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே வந்து சொல்ல வேண்டும். பரமக்குடி நகர் முழுவதும் டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு செல்பவர்கள், மதுரை வழியாகச் செல்வார்கள் என்பதால் மதுரை மாநகர காவல்துறை சார்பில் முக்கியச்சாலைகள் மற்றும் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்பகுதிகளில் நேற்று இரவு முதல் 24 மணி நேர தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து போலீஸ் சோதனைச்சாவடிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோதனைச்சாவடிகள் வழியாகச் செல்லும் சந்தேகத்துக்குரிய வாகனங்களில் போலீசார் சோதனையிடவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.