இன்று உலக சுனாமி விழிப்புணர்வு தினம்..!
ஆண்டு தோறும், நவம்பர் 5 ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக கொண்டாடப் படுகிறது.
சுனாமி என்பது ஜப்பானிய வார்த்தை. ஜப்பான் மொழியில் சு (Tsu) என்றால் துறைமுகம் (Harbour). நாமி (nami) என்றால் அலையை (wave) குறிக்கும். சுனாமி என்றால் துறைமுக அலை என்று பொருள். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உள்ளன. தமிழில் “ஆழிப்பேரலை ; என்று அழைக்கப்படுகிறது.
சுனாமி பேரழிவு அரிதான ஒன்றாக இருந்தாலும் இதன் தாக்கம் மிகக் கொடுமையானது. கடலில் உள்ள தரைப்பகுதிக்கு அடியில் நிலத்தட்டுகள் நகரும்போது அல்லது ஒன்றுடன் ஒன்று மோதும்போது அங்கு திடீர் மாற்றம் ஏற்படும். அப்போது கடல் கொந்தளித்து ராட்சதஅலைகள் உருவாகி அருகில் உள்ள அனைத்து கடலோரப் பகுதிகளில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இதைத்தான் சுனாமி என்று அழைக்கிறார்கள்.கடல் அடியில் பூகம்பம் மட்டுமல்லாமல், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் விண்வெளியில் இருந்து விண் கல் விழுதல் ஆகியனவற்றின் காரணமாகவும் ‘சுனாமி’ ஏற்படுகிறது.சுனாமி அபூர்வமாக நிகழக் கூடியதுதான். எனினும் இயற்கைப் பேரிடர்களில் அதிகபட்ச உயிரிழப்பையும், பலத்த பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது. சுனாமிக்கு எல்லையே கிடையாது.கடந்த 100 ஆண்டுகளில் நடந்த 58 சுனாமி தாக்குதல்களில் இதுவரை இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.
சுனாமி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.
இந்த இயற்கை பேரழிவின் ஆபத்துக்களை கூறி, மக்கள் தங்களையும், தங்கள் உறவினர்களையும் காத்துக்கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்.