1. Home
  2. தமிழ்நாடு

இன்று வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்..!

1

 வ.உ.சி. என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டம், ஓட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவர் 1895-ம் ஆண்டு வள்ளி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

* ஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். அரசாங்க அலுவலரான கிருஷ்ணன் வ.உ.சி.க்கு ஆங்கிலம் கற்பித்தார். பதினான்கு வயதில் திருநெல்வேலியில் இந்துக் கல்லூரியிலும் சேர்ந்து கல்வி கற்றார். கணபதி ஐயர், அரிகரன் ஆகியோர் அவருக்கு சட்டம் கற்பித்தனர்.

* வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. இவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

* தமிழ் மொழியில் உள்ள அதிக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார், ஆங்கில நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.

* வ.உ.சி. 1892-ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.

* அவர் சட்டத் தேர்வை 1894-ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1895ல் ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். இவர் பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தில் யாரெல்லாம் நீதித்துறையில் ஊழல் புரிந்தார்களோ அவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு தண்டனையும் வாங்கி கொடுத்தார்.

* வ.உ.சி., பாரதியாரின் பாடல்களை விரும்பி கேட்டதால் அவருடன் நெருக்கமான நட்பு எற்பட்டது. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இருவரும் சந்தித்துக் கொண்டபொழுது இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். வ.உ.சி.யும் பாரதியாரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

* நான் வழிபடும் தெய்வம் பாரத மாதா, அரசியல் தான் என்னுடைய வாழ்க்கை , சுதந்திரம் தான் என் மோட்சம் எனும் கோட்பாட்டை உயிர் மூச்சாக கொண்டவர் வ.உ.சி. இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார்.

* பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி”, இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.

* அதன்படி, 1906 ம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் பல பேரிடம் பங்குகளை வாங்கி ரஷ்யாவிலிருந்து எஸ்.எஸ். காலியோ மற்றும் எஸ்.எஸ்.லாவோ என்ற இரு கப்பல்களை வாங்கி அதை தூத்துக்குடிலிருந்து கொழும்புவிற்கு விட்டார்.

* ஆங்கிலேய வர்த்தகத்தை நலிவடைய செய்வதற்காக ‘சுதேசி பண்டக சாலை’எனும் இந்தியாவில் மட்டும் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் அமைப்பை வ.உ.சி. உருவாக்கினார்.

* சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியுடன் வ.உ.சி. திருப்தியடையவில்லை. அவர் மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வைத் தூண்ட நினைத்தார். தூத்துக்குடி கோரல் நூற்பாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டதில் கலந்து கொண்டு தலைமையும் தாங்கினார்.

* சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலேயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருக்க, நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றியும் அவர்களை அச்சுறுத்தியது. ஆகையால் வ.உ.சி.யை கைது செய்ய ஆங்கிலேயர்கள் காத்திருந்தனர். வங்கத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவரான பிபின் சந்திர பால் விடுதலையை, வ.உ.சி. ஒரு விழாவாக கொண்டாட எண்ணியதால் அவர் 1908-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் கைது செய்யப்பட்டார்.

* இவர் கைது செய்யப்பட்டதால் திருநெல்வெலியில் கலவரங்களும், போராட்டங்களும் அரங்கேறின. இதனால் காவல் துறையினர் வ.உ.சி.க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆங்கில அரசுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும்படி மக்களைத் தூண்டிவிட்டதற்காக 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை, சுப்பிரமணிய சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக மற்றுமொரு 20 ஆண்டு தீவாந்திரத் தண்டனை என்ற இரு தண்டனைகளையும் நீதிபதி பின்கே அளித்தார்.

* தனது 36வது வயதில் 40 வருட தீவாந்திரத் தண்டனை! யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனையை அனுபவித்தார். சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். அதனாலேயெ இவர் ‘செக்கிழுத்த செம்மல்’ என அழைக்கப்படுகிறார். கடுமையான போராட்டத்திற்கு பிறகு இவரின் தண்டனை பாதியாக குறைக்கப்பட்டது.

* கடுமையான தண்டனைக்கு பிறகும் தன் கடைசி மூச்சு வரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து வந்த வ.உ.சி 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.

* கோயம்புத்தூர் மத்திய சிறையில் வ.உ.சி. இழுத்த செக்கு சென்னை காந்தி நினைவு மண்டபத்தில் நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. வ.உ.சி பிறந்த ஒட்டப்பிடாரம் ஊரில் தமிழ்நாடு அரசு வ.உ.சிதம்பரனார் இல்லத்தை அமைத்துள்ளது. இவருக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு சார்பாக சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

* 1972-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி வ.உ.சி. யின் நூற்றாண்டு விழாவின்போது அவர் பெயரில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. அஞ்சல் தலையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்டார். வ.உ.சி.-யின் வாழ்க்கை வரலாறு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளியானது.

Trending News

Latest News

You May Like