1. Home
  2. தமிழ்நாடு

இன்று வைகுண்ட ஏகாதசி..! பாவத்தைப் போக்கும் வைகுண்ட ஏகாதசி..!

1

2025 ஆம் ஆண்டு இரண்டு சொர்க்க வாசல் திறப்புகள் இருக்கின்றன. ஜனவரி மாதம் 09, 2025 அன்று பிற்பகல் 12:22 முதல் ஜனவரி 10, 2025 அன்று காலை 10:19  மணியுடன் முடிவடைகிறது. அதேபோல் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 30, 2025 அன்று காலை 07:50  மணிக்கு தொடங்கி  டிசம்பர் 31, 2025 அன்று காலை 05:00  மணிக்கு ஏகாதசி திதி முடிகிறது.

கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார்.

 பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்
தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. 

பத்ம புராணத்தின் படி, விஷ்ணு முரன் என்ற அரக்கனுடன் போரிட்டார், சண்டைக்கு இடையில், ஒரு குகைக்குச் சென்று ஓய்வெடுக்கவும், அரக்கனைக் கொல்ல புதிய ஆயுதத்தை உருவாக்கவும் சென்றார். மகாவிஷ்ணு ஓய்வில் இருந்தபோது, அரக்கன் முரன் அவரை குகையில் கொல்ல முயன்றான். இருப்பினும், விஷ்ணுவின் உடலில் இருந்து பெண் வடிவில் உள்ள ஆற்றல் வெளிப்பட்டு அவரைக் கொன்றது அரக்கன் முரனின் முயற்சிகள் அழிக்கப்பட்டன. விஷ்ணு பகவான் அந்தப் பெண் ஆற்றலால் ஈர்க்கப்பட்டு அவளை ஏகாதசி என்று அழைத்தார். அவரும் அவளுக்கு ஒரு வரம் கொடுத்தார், அவளுடைய வரமாக, அந்த நாளில் விரதம் அனுஷ்டிக்கும் எவருக்கும் மோட்சம் கிடைக்கும் என்று கேட்டாள். விஷ்ணு பகவான் அவளுக்கு அந்த வரத்தை அளித்தார். அப்போதிருந்து, ஏகாதசி அல்லது இந்து நாட்காட்டி மாதமான மார்கசிர்ஷா அல்லது மார்கழியின் 11 வது சந்திர நாளில் விரதம் இருப்பவர்கள் மோட்சத்தை அடைந்து சொர்க்கத்தை அடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

வைகுண்ட வரலாற்றில் மற்றொரு புராணக்கதை , இந்த நாளில், 'சாகர் மத்தனம்' செய்யப்பட்டது. இந்த சாகர் மந்தனின் போது, பாற்கடலில் இருந்து தெய்வீக அமிர்தம் வெளிப்பட்டு, தேவர்களிடையே விநியோகிக்கப்பட்டது. எனவே இந்த புனித நாளில் இறந்தவர்கள் வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு சொர்க்கம் அல்லது வைகுண்டத்தை அடைவார்கள் என்று இந்து பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த புராணக்கதையை ஆதரிப்பது மகாபாரதத்தில் வரும் பீஷ்மர் ஏகாதசி இறக்கும் வரை காத்திருக்கும் கதை. சில இடங்களில் இந்த காரணத்திற்காக "பீஷ்ம ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது.
மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது
திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று  ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

வருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. தீட்டு காலத்தில் கூட ஏகாதசி விரதத்தை  மேற்கொள்ளலாம்.


ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர்.


வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும்.  வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி  என்பர்.
வைகுண்ட ஏகாதசி விரதம்  மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.

Trending News

Latest News

You May Like