1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஆடி செவ்வாய்... மறக்காம எலுமிச்சங்கனி வழிபாடு செய்யுங்க..!

1

நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய குலதெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் நம்மால் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய முடியும். அந்த நல்ல காரியத்திற்குரிய பலனையும் பெற முடியும். அதனால் கண்டிப்பான முறையில் குலதெய்வ வழிபாட்டை நாம் அனைவரும் அன்றாடம் செய்ய வேண்டும். இருப்பினும் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் குலதெய்வ வழிபாட்டை நாம் மேற்கொள்ளும் பொழுது அந்த வழிபாட்டிற்கு அதீத சக்தி ஏற்படும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த நாளாக தான் ஆடிச் செவ்வாய்க்கிழமை திகழ்கிறது.

இந்த வழிபாட்டை காலை 11 மணிக்குள் செய்துவிட வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு இரண்டு எலுமிச்சம் பழம் வேண்டும். காலையில் எழுந்ததும் ஒரு எலுமிச்சம் பழத்தை குளிப்பதற்கு முன்பாக கையில் வைத்துக்கொண்டு நம்முடைய குலதெய்வத்தின் பெயரை 51 முறை கூறவேண்டும். “ஓம் குலதெய்வத்தின் பெயர் நம” என்று 51 முறை கூற வேண்டும். பிறகு அந்த எலுமிச்சம் பழத்தை நறுக்கி நம்முடைய முகம், கழுத்து, பின் கழுத்து, மார்பு, வயிறு போன்ற இடங்களில் தேய்த்து ஐந்து நிமிடம் வைத்திருந்து பிறகு குளிக்க வேண்டும்.

இவ்வாறு குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய தட்டில் வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாய் நாணயம், அந்த நாணயத்திற்கு மேல் புள்ளிகள் இல்லாத நல்ல எலுமிச்சம்பழம் ஒன்று வைக்க வேண்டும். எப்பொழுதும் போல் சுவாமி படங்களுக்கு மலர்களை சாற்றுவது, தீபம் ஏற்றுவது, ஊதுபத்தி, சாம்பிராணி தூபம் போடுவது இவை அனைத்தையும் செய்து கொள்ளுங்கள். பிறகு திரும்பவும் குலதெய்வத்தின் பெயரை கூறி 51 முறை அந்த எலுமிச்சம் பழத்திற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டி முடித்த பிறகு அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு வீட்டில் இருப்பவர்களுக்கும் தர வேண்டும். அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து வீட்டில் இருக்கக் கூடிய அனைவருக்கும் கொடுத்துவிட்டு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை செய்து அதையும் அனைவரும் சாப்பிட வேண்டும். அன்றைய தினம் கண்டிப்பாக முறையில் வீட்டு பூஜை அறையில் வைத்து வெற்றிலை பாக்கை சுமங்கலி பெண்கள் நாக்கு சிவக்க போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருளும் மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

ராஜகனி என்று கூறக்கூடிய எலுமிச்சம் கனியை வைத்து இந்த முறையில் குலதெய்வ வழிபாட்டை செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்

Trending News

Latest News

You May Like