இன்று விநாயகர் சதுர்த்தி வழிபட வேண்டிய நேரம், பூஜை செய்யும் முறை..!
அமாவாசை , பௌர்ணமி முடிந்த 4 வது நாளில் சதுர்த்தி திதி வரும். தேய்பிறை சதுர்த்தி திதி சங்கடங்களை தவிர்ப்பது சங்கடஹர சதுர்த்தி. வளர்பிறை சதுர்த்தி திதி வளங்களைக் கொடுப்பது. இந்நாட்களில் நாம் விநாயகரைத் தவறாமல் வழிபட வேண்டும். அவ்வாறு ஒவ்வொரு மாதமும் வழிபட முடியாதவர்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது விநாயகர் சதுர்த்தி.
எல்லோருக்கும் எளிமையாகக் கிடைக்கும் களிமண்ணில் பிள்ளையார் செய்து அதற்கு வழிபாடு செய்வது இந்த நாளின் விசேஷமாக கருதப்படுகிறது. விநாயகரை வழிபடுவது மிக, மிக எளிமை. அருகம்புல் சாத்தி வழிபட்டாலே அவர் மனம் மகிழ்வார். எருக்கம்பூமாலை சூட்டினாலே வரம் தருவார். இப்படி விநாயகர் சதுர்த்தியை வழிபட்டாலே வினைகள் விலகும். துன்பங்கள் விலகும். இந்த ஆண்டு சனிக்கிழமை செப்டம்பர் 7ம் தேதி வருகிறது. இந்நாளில் வளர்பிறை சதுர்த்தி திதி பிற்பகல் 3.38 வரை இருக்கிறது. எனவே விநாயகருக்குச் செய்யவேண்டிய பிரதான பூஜையை அன்று காலையிலேயே செய்ய வேண்டும். காலை 7.45 முதல் 8.45 வரை நல்ல நேரம் இருப்பதால் அந்த நேரத்தில் விநாயகர் வழிபாட்டைத் தொடங்கலாம். சனிக்கிழமை 9 மணி முதல் 10.30 வரை ராகு காலம். இதற்கு முன்பாக எப்போது வேண்டுமானாலும் விநாயகரை வாங்கிவந்து வழிபாட்டைத் தொடங்கலாம். அல்லது ராகு காலம் முடிந்ததும் காலை 10.30 மணிக்கு மேல் வழிபாட்டைத் தொடங்கலாம். அதே போல் பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை எமகண்டமும் வருகிறது. இந்த நேரத்தில் பூஜை செய்யாமல் இருப்பது நல்லது
எந்த பூஜையைத் தொடங்கினாலும் மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபாட்டைத் தொடங்க வேண்டும். விநாயகர் அந்த மஞ்சள் பிள்ளையாரில் எழுந்தருளி குருவாக அமர்ந்து பூஜையைக் குறைவின்றி நடத்திக் கொடுப்பார் என்பது நம்பிக்கை. விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு முன்பாகவும் மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து விநாயகருக்கு உகந்த நாமங்களைச் சொல்லி மலர் சாத்தி வழிபடலாம்.
ஓம் சுமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம: ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம: ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம: ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதுவே நம: ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம: ஓம் கஜானநாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம: ஓம் சூர்ப்பகர்ணாய நம:
என்னும் மந்திரங்களைச் சொல்லி மலர் தூவி வழிபட்டு மஞ்சள் பிள்ளையாருக்கு ஒரு வாழைப்பழம் சமர்ப்பித்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபடலாம்.
பின்பு கைகளில் பூக்களும், அட்சதையும் ஏந்தி 'விநாயகரே... இந்த விக்ரகத்தில் எழுந்தருளி எங்களுக்கு அருள்பாலிப்பாயாக' என வேண்டிக்கொண்டு ஒரு துளி நீர் சேர்த்து களிமண் திருமேனியின் மீது விடவேண்டும். அதன்பின் விநாயகருக்கு சந்தனம் குங்குமம் இட்டு அலங்காரம் செய்ய வேண்டும். அஷ்டோத்திர (108) நாமாவளியால் அர்ச்சிக்கலாம்.
விநாயகருக்கு உகந்த நிவேதனங்களான, மோதகம், பாயாசம், சுண்டல், கரும்பு, வெல்லம் ஆகியவற்றை நைவேத்தியமாக சமர்ப்பித்து வழிபடலாம். தூபதீபம் காட்டி விநாயகப்பெருமான் துதி பாடலாம். விநாயகரை மனமுருகி வழிபடும் போது நம் வினைகள் ஓடும். குறிப்பாக நாளை சனிக்கிழமை என்பது சனிபகவானுக்கு உரியது. சனிபகவானால் அணுக முடியாதவர்கள் இருவர். ஒருவர் விநாயகர் மற்றொருவர் அனுமன். விநாயகரை வழிபடுபவர்களை சனிபகவான் தொல்லை செய்வதில்லை . சந்திரன் மனோகாரகன். சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் மனம் சார்ந்த பிரச்னைகள் தீரும். நம் அறிவு மேம்படும். விநாயகருக்குத் தேங்காய் மாலை சாத்தி வழிபட்டால் வினைகள் விலகும். சுண்டல் நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு விநியோகித்தால் மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும். விநாயகர் சதுர்த்தியில் மாலை விநாயகருக்குக் கற்பூரம் காட்டி மலர்கள் தூவி வழிபட்டுப் பின் சந்திரனை தரிசனம் செய்தால் கூடுதல் பலன்களை பெறலாம்.