இன்று தான் கடைசி நாள்.. மனு தாக்கலுக்கு ரெடியாகும் திமுக, நாதக!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். திமுக சார்பில் வேட்பாளராக வி.சி.சந்திரகுமாரும், நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமியும் களம் காண்கின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக என முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர புறக்கணித்துவிட்ட நிலையில், திமுகவை எதிர்த்து நேருக்கு நேர் களமிறங்குகிறது நாம் தமிழர் கட்சி. இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக நிர்வாகிகள், நாதக நிர்வாகிகள் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இடையே பொங்கல் விடுமுறை காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை. இதுவரை 9 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இன்று பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவுள்ளனர். நாளை (சனிக்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வருகிற 20ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தக் குழுவினர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.