இன்று தான் கடைசி..! ஓய்வூதியதாரர்களுக்கான குறை தீர்ப்பு முகாம்: குறைகளை சமர்ப்பிப்பது எப்படி?

ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன், தொலைத்தொடர்பு கணக்குகள் இணை கட்டுப்பாட்டாளர் (ஓய்வூதியம்), தமிழ்நாடு வட்டம், சென்னை 600 008 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அல்லது ‘jtccapen.ccatn[at]nic[dot]in’ என்ற மின்னஞ்சல் மூலமாக சமர்ப்பிக்கலாம். எத்திராஜ் சாலை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர்ப்பு பெட்டியிலும் சமர்பிக்கலாம். குறைகளை தெரிவிப்பதற்கான கடைசி தேதி 14.06.2025 மாலை 06.00 மணி வரை.
ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் குறைகளை முன்பே சமர்ப்பித்து, குறைகள் தீர்க்கப்படாமல் இருந்தால் மட்டுமே இந்த முகாமில் பரிசீலிக்கப்படும். குறைதீர்ப்பு முகாமில் நேரடியாக சமர்ப்பிக்கப்படும் குறைகள் பரிசீலிக்கப்படாது. 2025 ஜூன் 1 நிலவரப்படி 6 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியம்/எஃப்எம்ஏ தீர்வு தொடர்பான குறைகள் ௨ள்ள ஓய்வூதியதாரர்கள் மட்டுமே இந்த முகாமில் பங்கேற்கலாம்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட கொள்கை விவகாரங்கள், மேப்பிங் கடிதங்கள், இபிபிஓ மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடையாள அட்டைகள் வழங்குவது, பிபிஓ மாறுதல், ஊதிய ஒழுங்கின்மை தொடர்பான குறைகள் இந்த முகாமின் வரம்பிற்குள் வராது. குறைகளுக்கான படிவத்தில் போதுமான விவரங்கள் இல்லாத மனுக்கள் தீர்வுக்கு பரிசீலிக்கப்படாது. குறைகள் பெறுவதற்கான கடைசி தேதி 14.06.2025- (மாலை 06.00 மணி வரை)
அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள்/ ஓய்வூதியம் பெறுவோர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாமில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் ஓய்வூதியதாரர்களின் குறைகளை, ஓய்வூதியதாரர்கள் இல்லாத நிலையில் முன்வைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எனினும் படிப்பறிவற்ற ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்/சிறு வயதினராக இருந்தால், அத்தகைய ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியதாரர்களின் குறைகளை முன்வைக்க அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியர் சங்கத்தின் பிரதிநிதி அனுமதிக்கப்படுவார்.
அனைத்து குறைகளும் அதாலத் தேதிக்கு முன்னர் பரிசீலிக்கப்பட்டு தீர்க்கப்படும். தகுதியான/நிலுவையில் உள்ள குறைகளைப் பொறுத்தவரை, ஓய்வூதியதாரர்களுக்கு விசாரணை நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் குறுஞ்செய்தி/மின்னஞ்சல்/தபால் மூலம் தெரிவிக்கப்படும். இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.cgca.gov.in/ccatn ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்து குறைகளை சமர்ப்பிப்பதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.