இன்று நவராத்திரி முதல் நாள் : நாம் செய்ய வேண்டிய பூஜைகள், கொலு அமைக்கும் நேரம் இதோ..!
நவராத்ரி பண்டிகையில் வீடுகளை அலங்கரித்து கொலு வைத்து அம்மனை கொண்டாடுவார்கள். புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை முடிந்து மறுநாள் பிரதமை தொடங்கி தசமி வரை பத்து நாட்கள் கொண்டாடப்படும் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி பண்டிகை.முப்பெரும் தேவியர்களான கலைமகள், மலைமகள், அலைமகளின் அருட்கடாட்சம் நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறைந்திருக்கும்.
நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளை பெற்றார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.
சிவனை வழிபட ஒரு ராத்திரி சிவராத்திரி இது மாசி மாதம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகின்றோம். சக்தியை வழிபட ஒன்பது ராத்திரி நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நவம் என்பது ஒன்பது. அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி விழாதான். இது அம்மனுக்கு 9 நாட்கள் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம். இந்த ஆண்டு இன்று (அக். 15) முதல் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது அக்டோபர் 24-ம் விஜயதசமியுடன் பண்டிகை முடிகிறது.
நவராத்திரி கொலு அமைக்கும் நேரம் :
இந்துக்களின் வழிபாட்டு முறைகளின் படி கிரகணம் என்பது சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற காலம் இல்லை என கருதப்படுகிறது. கிரகணத்தின் போது கோவில்கள் அடைக்கப்பட்டு விடும், கிரகண நேரம் நிறைவடைந்த பிறகு கோவில் முழுவதும் சுத்தம் செய்து, தெய்வத்திற்கு அபிஷேகம், சாந்தி மற்றும் பரிகார பூஜைகள் செய்த பிறகே மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு சூரிய கிரகணம் அக்டோபர் 14-ம் தேதி இரவிலேயே நிகழ்கிறது.
அதனால் மகாளய அமாவாசை அன்று கொலு அடுக்கி வைத்தால் இன்று (அக். 15) காலை வீடு முழுவதையும், பூஜை பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்த பிறகே நவராத்திரி பூஜையை துவங்க வேண்டும். இது அனைவருக்கும் சிரமம் என்பதால் இன்று காலையில் கொலு அமைப்பதே சிறப்பானதாகும். முதல் நாளே கொலுவிற்கான பொம்மைகள், கொலு படிகளை துடைத்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டால், இன்று காலை வீட்டை சுத்தம் செய்து கொலு படிகள் அடுக்குவதற்கு எளிதாக இருக்கும்.
நவராத்திரி பூஜை துவங்குவதற்கான நேரம் :
இன்று (அக். 15) காலை 06.05 மணி முதல் 11.45 மணி வரையிலான நேரத்திற்குள் கொலு படிகள் அடுக்கி, ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து, நவராத்திரி பூஜையை துவக்கி விட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். ராகு காலம், எமகண்டம் தவிர்த்து பூஜை செய்ய வேண்டும். காலை பூஜையை 9 அல்லது 10 மணிக்கு நிறைவு செய்து விட வேண்டும். மாலை பூஜையை 6 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
முதல் நாள் வழிபாடு :
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை துர்க்கையாக வழிபட வேண்டும். துர்க்கை என்றாலே துக்கங்களை நீக்கி, நமக்கு அரணாக இருந்து காக்க கூடியவள் என்று அர்த்தம். அனைத்திலும் வெற்றியை தரக் கூடியவள் என்பதாலும், அம்பிகை தவம் செய்ய துவங்கிய காலம் என்பதால் இந்த நாளில் நாமும் அவளை மனதார நினைத்து வழிபடலாம்.
நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை உமா மகேஸ்வரியாக அலங்கரித்து வழிபட வேண்டும். நவ துர்க்கைகளில் முதல் தேவியான சைலபுத்திரியாகவும் வழிபட வேண்டும். அரிசி மாவினால் பொட்டு வகை கோலம் அமைத்து, மலர்களில் மல்லிகையும், இலைகளில் வில்வமும் கொண்டு அம்பிகையை அர்ச்சித்து வழிபட வேண்டும்.
நைவேத்தியமாக வெண் பொங்கல் அல்லது சுண்டல் படைத்து வழிபட வேண்டும். பாட வேண்டிய ராகம் தோடி. இந்த நாளில் அம்மனுக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி அலங்கரிக்க வேண்டும். நாமும் பச்சை நிற உடை உடுத்து பூஜை செய்ய வேண்டும்.