இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்..! உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் இன்று மரியாதை..!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 67-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மதுரை உள்பட தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.இதனையொட்டி மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி பரமக்குடி முழுவதும் பல்வேறு வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 150 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண் காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 3 டிஐஜி.க்கள், 19 எஸ்.பி.க்கள், 61 டிஎஸ்பி.க்கள் உள்ளிட்ட 6,200-க்கும் மேற்பட்ட போலீஸார் பரமக்குடி உட்பட மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று பரமக்குடி சந்தைபேட்டை பின்புறம் அமைந்துள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் மரியாதை செலுத்துகின்றனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மரியாதை செலுத்துகின்றனர். மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் சமுதாய தலைவர்களும் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்துகின்றனர்.