1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஆடி மாத பிறப்பு..! ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால்...

1

பொதுவாக ஆடி என்பது முக்கியமாக நம் பெண் தெய்வங்களான அம்மன்கள், பெண் தேவதைகள், காவல் தெய்வங்கள் ஆகியோருக்கான மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் விரதமிருந்து அம்மன் கோயில்களில் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுபவர்களின் வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறும் என்று நம்பப்படுகின்றது. ஆடி மாதத்தில் அநேகமாக அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு விமரிசையாக நடத்தப்படுகின்றன. தெய்வீக சக்தியுடன் நம்மை இணைத்துக்கொள்ள ஆடி மாதம் உகந்த மாதமாக கருதப்படுகின்றது.

அம்மனின் அருளை பெறுவதற்கு கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல், பால் குடம் ஏந்தி வருதல், தீ மிதித்தல் ஆகிய வழிபாடுகள் மக்கள் செய்வர். 

ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் அமைகிறது. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

ஆடி மாத துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் குறையத் துவங்குகிறது. வெப்பம் குறைந்து மழை பெய்யத் துவங்கும் நேரமும் இதுதான். ஆடியில் காற்றும் பலமாக வீசும். ஆடியில் வீசும் காற்று தன்னுடன் அம்மன் அருளையும் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்லும் என்ற நமிக்கையும் கிராமப்புறங்களில் உள்ளது.

ஆடி மாதத்தில் வரும் நல்ல நாட்கள்

பொதுவாக ஆடி மாதத்தில் வரும் அனைத்து செவ்வாய் மற்றும் வெளிக்கிழமைகளும் மிகவும் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்நாட்களில், பெண்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்து மற்ற பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலம் அளிப்பது வழக்கம்.

இந்த மாதத்தில் கொண்டாடப்படும் சில முக்கியமான பண்டிகைகள் பின்வருமாறு:

ஆடிப்பிறப்பு: ஆடி மாதத்தின் முதல் நாள் ஆடிப் பண்டிகை அல்லது ஆடிப்பிறப்பு என்று கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், இலங்கையிலும், ஈழத் தமிழர்களுக்கு மத்தியில் ஆடிப்பிறப்பு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. 

வரலட்சுமி அம்மன் விரதம்: லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முக்கியமான பூஜைகளில் ஒன்றான வரலட்சுமி பூஜை ஆடி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை செய்யப்படுகிறது. இந்த நாளில் வரலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டு பிரசாதங்கள் அளிக்கப்ப்டுகின்றன.

ஆடிப்பெருக்கு: ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என்று அழைக்கப்படும் இந்த விழா ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. நல்ல மழைக்கும், வளமான பயிருக்கும், செழிப்பான விளைச்சலுக்கும் மக்கள் கடவுளை வேண்டும் நாளாகும் இது. பருவமழை காரணமாக பொதுவாக, இந்த காலத்தில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீரைக் காணவும், வணங்கவும் மக்கள் ஆற்றங்கரைக்கு வந்து படையல் இடுவது வழக்கம். சொந்தங்களுடனும் நண்பர்களுடனும் ஆற்றங்கரையிலேயே உணவுண்டு பேசி மகிழும் நாளாகும் இது.

ஆடிப்பூரம்: ஆடிப்பூரம் ஆண்டாள் நாச்சியாரின் பிறந்த நட்சத்திரத்தைக் குறிக்கும் திருவிழாவாகும். இந்நாளில் சூடிக் கொடுத்த சுடர்கொடி கோதைக்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெண்களுக்கு வளையல்கள் வழங்கப்படுகின்றன.

ஆடிக்கிருத்திகை: ஆடிக்கிருத்திகை தமிழ்க் கடவுள் முருகனுக்கு உகந்த நாளாகும். முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் முருகனுக்கு விரதமிருந்து வணங்குவோரை எந்த வினையும் அண்டாது.

புத்துக்கு பால்: ஆடி மாதம் வரும் நாக பஞ்சமியில் மக்கள் புற்றுகளில் உள்ள பாம்புகளுக்கு பால் ஊற்றுவது வழக்கம். பாம்புகளை கடவுளின் பிரதிநிதியாகப் பார்க்கும் நம் கலாச்சாரத்தில் இது மிகுந்த முக்கியத்துவத்தைப் பெருகிறது. சிலர் பாம்பின் சிலைகளுக்கு பால் அபிஷேகமும் செய்கிறார்கள். பால் ஊற்றி அபிஷேகம் செய்வதால் நாக தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.    


பிதுர் கடமைகள்

ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பலவித காய்கறிகளை கொண்டு தயாரான கதம்ப சாதத்தை படைத்து வழிபடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக் தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உபவாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும். ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும். இந்த ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17-ம் தேதி புதன்கிழமை துவங்கி, ஆகஸ்ட் 16-ம் தேதி வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது.

Trending News

Latest News

You May Like