1. Home
  2. தமிழ்நாடு

இன்று மார்கழி 6ம் நாள் : பறவைகள் எழுப்பும் ஓசை கேட்கவில்லையா..? தோழியை எழுப்பும் ஆண்டாள்...

1

இன்றைய மார்கழி ஆறாவது நாளில், ஆறாவது பாடல் முதல்  இன்றிலிருந்து வீடு வீடாகச் சென்று, தோழிகளை எழுப்புவது போன்ற பாடலை உருவாக்கியுள்ளார்.

 அவர் எப்படி எழுப்புகிறார் என்றால்,

பறவைகள் எழுந்து  எழுப்பும் ஓசை கேட்கவில்லையா..

பெருமாள் கோயிலில் ஒலிக்கும் சங்கு ஒலி கேட்கலையா…

அரி என்ற நாமத்தை சொல்லி முனிவர்களும் எழுந்துவிட்டனர்....

இதை உணர்ந்தாவது, நீ எழ வேண்டாமா என்கிறார். மேலும், எழும்போது தடால் புடாலென்று எழுந்திருக்க வேண்டாம், பொறுமையாக எழுந்திரு என்று உணர்த்துகிறார்.

இதையடுத்து, தோழி ஒருத்தியை எழுப்பி, இரு தோழிகளும் சேர்ந்து மற்ற தோழிகளை எழுப்ப அவர்களது வீட்டுக்கு செல்கின்றனர்.

திருப்பாவை பாடல் 6:

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய்; பேய்முலை நஞ்சுண்டு,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை,

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்,

மெள்ள எழுந்தங் கரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ எம்பாவாய்

பொருள்: அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

விளக்கம்: பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான். கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.

Trending News

Latest News

You May Like