இன்று சண்டே..! மணக்கும் மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்து பாருங்க..!

இந்த வாரத்தில் ஒரு நாள் சுவையான மற்றும் வித்தியாசமான சிக்கன் சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்போது, இந்தச் சண்டே மணப்பட்டி ஸ்பெஷல் சிக்கன் சுக்கா செய்வது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்வது மிகவும் எளிதாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும். முக்கியமாக, இந்தச் சிக்கன் சுக்கா ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சிறந்தது. இந்தச் சிக்கன் சுக்காவிற்கு அதிகமான மசாலா தேவையில்லை; சில மசாலாக்களே போதுமானது. ஒருமுறை இதனைச் செய்து பார்த்தால், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி இதனைச் செய்யும்படி கேட்டுக்கொள்வார்கள்.
சிக்கன் சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – 1 சிறிய துண்டு (துருவியது)
உப்பு – சுவைக்கேற்ப
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
பூண்டு – 10 பல் (தட்டிக் கொள்ளவும்)
முந்திரி – 25 கிராம்
மணப்பட்டி சுக்கான் செய்வதற்கான செய்முறை :
முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயோ, குக்கர் அடுப்பில் வைத்து, அதில் சிக்கனை சேர்த்து, சிக்கன் நீர் விட்டு வரும் வரை வேக வைக்க வேண்டும். சிக்கனிலிருந்து நீர் வெளியே வந்ததும், அந்த நீரை எடுத்துவிட்டு, பின் அதில் நல்லெண்ணெயை ஊற்றிக் கிளறி விட வேண்டும். பின்பு அதில் மஞ்சள் தூள், வரமிளகாய், மிளகாய் தூள் மற்றும் துருவிய இஞ்சியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
சிக்கன் நன்கு வெந்ததும், அதில் சீரகத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும். பிறகு பூண்டு தட்டி சேர்த்து, 3 நிமிடம்வரை கிளறி விட்டு, முந்திரியைத் தூவி 3 நிமிடம் நன்கு வதக்கி இறக்கினால், சுவையான “மணப்பட்டி சிக்கன் சுக்கா” தயார். இதனைச் சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். சிறுவர்கள் முதல் வீட்டில் உள்ள அனைவருமே விரும்பிச் சாப்பிடுவார்கள்.