மக்களே இன்று பாரதிராஜா பிறந்த நாள் இல்லையாம்..! பாரதிராஜா பிறந்தநாள் குழப்பம்..!
என் இனிய தமிழ் மக்களே என்பது ஒரு குறுகிய வட்டம் அல்ல அது பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியது என்று கூறும் பாரதிராஜாவுக்கு அப்பா இட்ட பெயர் சின்னசாமி. அம்மா அவரைப் பால் பாண்டி என்பாராம். பிறகெப்படி பாரதிராஜா ஆனார்? அவருடைய தங்கையின் பெயர் பாரதி சகோதரருடைய பெயர் ஜெயராஜ். இவற்றிலிருந்து அவர் உருவாக்கிக்கொண்ட பெயரே பாரதிராஜாவாம்.
பாரதிராஜா மூன்றாம் வகுப்புப் படித்தபோது அவருடைய ஆசிரியர் அவரைக் குறத்தி வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார். ஐந்தாம் வகுப்புப் படித்தபோது மாறுவேடப் போட்டியில் பெண் வேடமிட்டுப் பரிசு (சோப்பு டப்பா) வென்றிருக்கிறார். ஒன்பதாம் வகுப்புப் படித்தபோது, அவருடைய தமிழாசிரியர் ராமலிங்கம் என்பவரின் ஊக்கத்தால் பள்ளியில் தமிழாசிரியர் எழுதிய தமிழ்ச்செல்வம் என்னும் நாடகத்தை ஏற்ற இறக்கமாகப் பேசிக் காட்டியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து பள்ளி விழாவில் நாடகம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த நாடகத்துக்காகச் சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் போன்ற பெருமையுடன் 5 ரூபாய் பரிசையும் பெற்றிருக்கிறார். அன்று விழுந்த அந்தச் சிறிய புள்ளி விஸ்வரூபமாக வளர்ந்து நமக்கு பாரதிராஜா என்னும் கலைஞனைக் கொடுத்திருக்கிறது.
அப்பாவின் பையிலிருந்து நாலணா திருடி ‘பூலோகரம்பை’ படம் பார்த்து வீட்டில் அடி, உதை வாங்கியிருக்கிறார் பாரதிராஜா. ஐம்பதுகளின் தொடக்கத்தில் வெளியான ’பராசக்தி’, ’மனோகரா’ போன்ற படங்களில் எழுதப்பட்ட மு.கருணாநிதியின் வசனங்களும் சிவாஜி கணேசனின் நடிப்பும் அவரைப் பாதித்துள்ளன.
அத்தகைய படங்களின் வசனங்களைப் பேசியே பொழுதைக் கழித்திருக்கிறார். பாரதிராஜாவுக்குச் சிறுவயதில் ஓவியம் வரைவதிலும் ஈடுபாடு இருந்திருக்கிறது; அரசியல் ஆர்வம் இருந்திருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து அவருக்கு நடிகனாகும் ஆசையைத் தந்திருக்கிறது. நடிகனாகும் ஆசையில்தான் பாரதிராஜா சென்னைக்கு வந்திருக்கிறார். ஆனால், இங்கே ஏற்பட்ட அனுபவங்கள் அவரை இயக்குநராக மாற்றிவிட்டன. அவர் நடித்த ‘கல்லுக்குள் ஈரம்’கூட அவருக்கு மோசமான அனுபவமே என்கிறார். அதை நினைவுபடுத்தக்கூட பாரதிராஜா விரும்புவதில்லை.
இயக்குனரைத் தொடர்ந்து, டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர், நடிகர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார் பாரதிராஜா 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. இப்படத்தைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், கல்லுக்குள் ஈரம், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், மண் வாசனை, தாவணி கனவுகள் என்று 50க்கும் மேற்பட்ட படங்களை கொடுத்துள்ளார். இதில், பல படங்களுக்கு சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில விருது, பிலிம்பேர் விருது, தேசிய விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.
கருத்தம்மா படத்தில் காடு பொட்டக்காடு என்ற பாடலை பாடியுள்ளார். தெக்கத்தி பொண்ணு, அப்பணும் ஆத்தாளும், முதல் மரியாதை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் உண்மையான பெயர் சின்னச்சாமி. இவரது பெற்றோர் பெரியமாயத்தேவர் – கருத்தம்மாள். பாரதிராஜா சந்திரலீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மனோஜ்குமார் என்ற மகனும் மற்றும் ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர்.
இவரது பிறந்தநாள் இன்று என்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் காலை முதலே அவரை வாழ்த்தி பதிவிட்டு வந்தனர். சிலரோ ஆகஸ்டு 23-ந் தேதி தான் பாரதிராஜாவின் அசல் பிறந்தநாள் என்று பதிவிட்டனர்.
இதுகுறித்து பாரதிராஜா தரப்பில் கேட்டபோது, இன்று 16 வயதினிலே படம் சென்சார் சான்றிதழ் வாங்கிய நாள். இதையே பிறந்தநாளாக பல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் இயக்குனருக்கு ஆகஸ்டு 23 தான் உண்மையான பிறந்தநாள் என்று விளக்கம் அளித்தார்கள்.
இன்னொரு காரணமும் வெளியாகியுள்ளது அதாவது கல்விச் சான்றிதழ்படி, அதுதான் 1941 ஜூலை 17 பிறந்த நாள். ஆனால், உண்மையில் அவர் பிறந்தது 1942 ஆகஸ்ட் 23.