இன்று மகா சிவராத்திரி..! இந்த நாளுக்கு அப்படி என்ன சிறப்பு தெரியுமா ?
சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் மிக முக்கியமானது மகா சிவராத்திரி விரதம் ஆகும். சிவ பெருமானின் அருளை பெறுவதற்குரிய மிக உன்னதமான புண்ணிய நாளாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருவதை மாத சிவராத்திரி என்றும், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வருவதை மகா சிவராத்திரி என்றும் கொண்டாடுகிறோம். நாடு முழுவதும் சிவ பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழாக்களில் மகாசிவராத்திரி விழாவும் ஒன்று. இந்துக்களின் மிக முக்கியமான விரத நாட்களில் இதுவும் ஒன்று. முப்பெரும் தேவர்களில் ஒருவரான சிவ பெருமானுக்குரிய ராத்திரியாக சிவ ராத்திரி கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரியின் சிறப்புகள் :
ராத்திரி என்றால் பொதுவாக இரவு பொழுதை குறிக்கும் என்பார்கள். ஆனால் ராத்ரம் என்ற சொல்லுக்கு அறிவு என்றும் பொருள் உண்டு. உலகின் தலைவனான சிவ பெருமானை உணர்ந்து அனுபவிக்கும் அறிவை தரக் கூடிய ராத்திரி என்பதாலேயே மகாசிவராத்திரி இத்தனை சிறப்புடையதாக கருதப்படுகிறது. சிவனை நம்முள் உணர்ந்து, நமக்குள் இருக்கும் சிவ தன்மை வெளிப்படும் நாள் என்பதால் சிவராத்திரியில் விரதம் இருந்து, சிவ பூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலன்களை தரக் கூடியது என சாஸ்திரங்கள் சொல்கின்றன. மகாசிவராத்திரி அன்று இரவு நான்கு கால பூஜைகள் நடைபெறும். இதில் முதல் காலத்தில் பிரம்மாவும், இரண்டாம் காலத்தில் பார்வதி தேவியும், மூன்றாம் காலத்தில் தேவர்களும், நான்காம் காலத்தில் மனிதர்கள் உள்ளிட்ட பிற உயிரினங்களும் சிவனை வழிபட்டு பயனடையும் காலம் என சொல்லப்படுகிறது.
மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை :
சிவராத்திரி அன்று இரவு முழுவதம் கண்விழித்து சிவ வழிபாடு செய்து, அபிஷேகம், ருத்ராபிஷேகம் செய்து, சிவ மந்திரங்களை உச்சரித்து சிவனின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கும், துன்பங்கள் மற்றும் பாவங்களில் இருந்து விடுபட்டு, மோட்சத்தை அடைவதற்கும் ஏற்ற நாள் இதுவாகும். மகாசிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து புனிதநீராடி, வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். பிறகு மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேகம், பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும். அன்று சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதும், வில்வ அர்ச்சனை செய்வதும் மிக சிறப்பானதாகும்.
மகா சிவராத்திரி விரத மந்திரங்கள், பலன்கள் :
மகா சிவராத்திரி நாளில் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நம சிவாய" மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது தவிர மகாமிருத்யுஞ்ஜய மந்திரம், சிவபுராணம் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் ருத்ராபிஷேகம் செய்வதும், கோவில்களில் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொள்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த முறையில் மகா சிவராத்திரி விரதம் இருந்தால் முந்தைய மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும். மனக்கவலைகள், நோய்கள், வறுமை நிலை ஆகியன நீங்கும். அதோடு வாழ்வில் அனைத்து விதமான இன்பங்களும், உயர்வும் கிடைக்கும். நாம் செய்யும் வழிபாடு, பூஜை ஆகியவற்றிற்கு இரு மடங்கு பலனை தரக் கூடியது மகா சிவராத்திரி விரதம் ஆகும்.