இன்று சுதந்திர தினம் : நம் நாட்டின் தேசியக்கொடி கடந்து வந்த பாதை..!
நம் நாட்டின் தேசியக்கொடி கடந்து வந்த பாதையை இப்போது காணலாம்.
1906 ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது வரை, நமது மூவர்ணக் கொடி பல்வேறு நிறத்தையும் வடிவத்தையும் கொண்டு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் சையத் பிர்தவ்ஸ் அஷ்ரப் என்பவர் நமது தேசியக்கொடியின் நீண்ட வரலாற்று தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி முதன் முதலாக ஆகஸ்ட் 7, 1906இல் நம் நாட்டில் முதல் தேசியக் கொடி பறக்க விடப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள பர்சி பாகன் சதுக்கத்தில் நாட்டின் முதல் தேசியக் கொடி 1906 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது.
அந்த கொடியில் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை என மூன்று நிறங்களில் கிடைமட்டமாக கோடுகள் வரையப்பட்டிருந்தன. மூவர்ண கொடியின் மையத்தில் தேவநாகரி மொழியில் வந்தே மாதரம் என பொறிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22, 1907இல் இரண்டாவது முறையாக புதிய வடிவத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆனால் இம்முறை இந்தியாவில் அல்ல.
ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச சோசியலிச கூட்டத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வின் மூலம், அந்நிய நாட்டில் முதன் முறையாக இந்திய கொடி ஏற்றப்பட்ட வரலாறு படைக்கப்பட்டது. இந்த மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர் மேடம் பிகாய்ஜி காமா என்று அழைக்கப்படும் பெண்மணி ஆவார்.
மூன்றாவது முறையாக மாறுபட்ட வடிவத்தில், டாக்டர் அன்னி பெசண்ட் மற்றும் பால கங்காதர் திலகர் இணைந்து 1917இல் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட சிவப்பு மற்றும் பச்சை நிறத்திலான கொடியை வடிவமைத்தனர்.
நான்காவது முறையாக 1921 ஆம் ஆண்டு, சக்கர ராட்டினத்துடன் அமைக்கப்பட்ட இந்திய கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியின் மையத்தில் சக்கரமும் வெள்ளை, பச்சை, சிவப்பு என மூன்று வண்ணத்திலும் கொடி அமைக்கப்பட்டது. இந்த வடிவத்தை கண்ட அண்ணல் காந்தியடிகள், இதே வடிவத்தை சற்று மாற்றியமைத்து, இந்திய தேசியக் கொடியாக உருவாக்கலாம் என்று எண்ணினார்.
சிவப்பு - இந்து மதத்தினரையும், பச்சை - இஸ்லாமிய மதத்தையும், வெள்ளை நிறம் - அமைதியும் மற்ற அனைத்து மதத்தினரையும் குறிக்கும் வகையில் அமைக்கப்படலாம் என்று காந்தியடிகளின் எண்ணப்படியே, மசூலிப்பட்டினத்தில் இருந்த வெங்கையா அந்த யோசனையை ஏற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து 1931 ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாக இந்திய தேசிய கொடி மாற்றம் செய்யப்பட்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இம்முறை மூவர்ணக் கொடியில் காவி நிறம், வெள்ளை நிறம் மற்றும் பச்சை நிறம், இவற்றின் நடுவே சக்கர ராட்டினம் அமைக்கப்பட்டு இருந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது இந்திய தேசிய ராணுவத்தில் இந்த கொடியை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 முதல், இந்திய கொடியின் மையத்திலிருந்து சக்கர ராட்டினத்தை மறுசீரமைத்து அசோக சக்கரமாக நிறுவி, இப்போது நாம் பயன்படுத்தும் மூவர்ணக்கொடி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.