இன்று இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பிறந்தநாள்..!
1977ஆம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி, ரஜினி என முன்னணி நடிகர்களை வைத்து 16 வயதினிலே என்ற படத்தை இயக்கினார் பாரதிராஜா.என் இனிய தமிழ் மக்களே என்ற கம்பீர குரலுக்கு சொந்தக்காரர்.
சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை,முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா என உணர்வுகள் இழையாடும் காலத்தால் என்றும் அழியாத பல திரைப்படங்கள் இவர் இயக்கத்தில் உருவானவை. இவர் தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் எனலாம்.16 வயதினிலே படத்தின் வெற்றி, பல்வேறு கிராமத்து இளைஞர்களுக்குள் இருந்த சினிமா ஆசையை தூண்டிவிட்டது. அவரைப்போல படமெடுக்க வேண்டும் என்கிற கனவோடு அந்த சமயத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள் ஏராளம்.
வைரமுத்து, பாக்யராஜ், மணிவண்ணன் , மனோபாலா, என எண்ணிலடங்கா கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார். 20-ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளுக்கான தமிழ் சினிமா கதாநாயகிகள் ராதிகா, ராதா, ரேவதி, வடிக்கரசி என பெரும்பாலும் இவர் பட்டறையில் வளர்ந்தவர்கள்.
6 தேசிய விருது,பத்ம ஸ்ரீ விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது தமிழக அரசின் மாநில விருது, உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பாரதிராஜா, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டத் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மண்வாசனையின் சொந்தக்காரரான இவர், தமிழ்நாட்டு கிராமங்களின் வாழ்வியலை ரத்தமும் சதையுமாக திரைப்படங்களில் பதிவு செய்ய முடியும் என காட்டிய பெரும் கலைஞன். 80 வயதைக் கடந்துவிட்ட நிலையில், மனதளவில் இன்னும் யூத் ஆகவே இருந்து வருகிறார். கலை மீது அவர் கொண்ட ஆர்வத்தையும் காதலையும் இன்றும் உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கிறார்.
இன்று வரை தமிழ் சினிமாவின் முகமாக பாரதிராஜா இருந்துகொண்டு தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில் அவர் ஏற்படுத்திய புதிய அலை ஒருபோதும் ஓயப்போவதில்லை. இன்று பிறந்தநாள் காணும் இந்த அல்லிநகரத்து அரசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.