இன்று கோயம்புத்தூருக்கு 220வது பிறந்த நாள்...!
தென்னிந்தியாவின் மான்செஸ்டர், கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரம், கொங்கு தமிழ், இதமான வானிலை என பல்வேறு சிறப்புகளுக்கு உரிய கோயம்புத்தூருக்கு இன்று 220வது பிறந்த நாள்.
பண்டைய காலத்தில் கோயம்புத்தூர் பகுதியை சேர மன்னர்கள் ஆட்சி செய்து வந்த நிலையில் ஒருகட்டத்தில் சோழ மன்னர்கள் கைகளுக்கு மாறியது. இதையடுத்து மைசூரை ஆண்ட கங்க மன்னர்கள், பாண்டியர்கள் என ஆட்சிகள் மாறிக் கொண்டே இருந்தன. 9ஆம் நூற்றாண்டில் மீண்டும் சோழர்கள் கைக்கு வந்த போது தான் சற்றே வளர்ச்சி காணத் தொடங்கியது.
இருளர் சமூகத்தை சேர்ந்த தலைவனை ’கோவன்’ என்று அழைப்பர். அந்த பெயரிலேயே ’கோவன்புதூர்’ எனப் பெயர் வைத்து அழைக்கப்பட்டு வந்தது. இது கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வழக்கில் மாறி ’கோயம்புத்தூர்’ என மாற்றம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.
18ஆம் நூற்றாண்டில் மைசூரை ஹைதர் அலி கைப்பற்றினார்.அப்போது ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் வெடித்தது. இந்த சூழலில் திப்பு சுல்தானை கொன்று மைசூர் மாகாணத்தை தங்கள் வசம் கொண்டு வந்து சென்னை மாகாணத்துடன் இணைத்தனர் ஆங்கிலேயர்கள். 1804ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோயம்புத்தூரை தலைநகரமாக கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்கினர்.
1848ல் கோயம்புத்தூர் நகராட்சியின் முதல் தலைவராக ராபர்ட் ஸ்டேன்ஸ் பொறுப்பேற்றார். இவர் மிகப்பெரிய தொழிலதிபர். ஒருங்கிணைந்த நீலகிரி டீ எஸ்டேட்டை உருவாக்கியவர். காட்டன் மில், காபி, டீ தோட்டங்கள், மோட்டார் தொழிற்சாலை என ஏராளமான தொழில்களை மேற்கொண்டு வந்தார். இவர் போட்ட விதை தான் கோயம்புத்தூர் தற்போது மிகப்பெரிய தொழில் நகரமாக வளர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.
கோயம்புத்தூரில் கடும் பஞ்சம் நிலவி வந்த சூழலில் அங்கு விளைவிக்கப்பட்ட பருத்தி தான் பெரிதும் கைகொடுத்தது. இதனைச் சார்ந்த தொழிற்சாலைகளும் வருகை தர படிப்படியாக வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. சுதந்திரத்திற்கு பின்னர் 1979ல் கோயம்புத்தூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் கோவை மாவட்டத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.