இன்று குழந்தைகள் தினம் : பணத்தின் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்போம்..!

குழந்தைகள் வானத்திலிருந்து வரும் மலர்கள் என்றும் கடவுளுக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். எனவே, இந்த பூமியை குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான மற்றும் சிறந்த இடமாக மாற்ற உறுதிமொழி எடுப்போம்.
இன்றைய காலத்தில் குழந்தைகள் பிறந்தது முதலே செலவு செய்ய ஆரம்பித்து விடுகிறோம். கடன் வாங்கியாவது பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றும் பெற்றோர்கள் இருக்கின்றனர். ஆனால் அது தவறான செயல். நம்முடைய பொருளாதார சூழ்நிலை, கடன், வரவு செலவு ஆகியவற்றை பிள்ளைகளுக்கு தெரிவிப்பது அவசியம்.
சிறுவயது முதலே சேமிக்கும் பழக்கத்தை அறிமுகம் செய்ய வேண்டும். உறவினர்கள் கொடுக்கும் பணத்தை உண்டியலில் போட்டு சேமிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் இரண்டு முதல் மூன்று வயதை அடையும் காலகட்டத்தில் பணத்தை எப்படி சேமிப்பது போன்ற விஷயங்கள் குறித்து கற்றுத்தருவது அவசியம்.
4 முதல் 5 வயதில் பள்ளிக்கு சேர்க்கும் போதே பணத்தின் அருமையை உணர்த்த வேண்டும். பெற்றோர்களின் சம்பளம், செலவு, கல்விக்கு ஆகும் செலவு ஆகிய அடிப்படை விசயங்களை கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு வரவு செலவு பற்றி தெரியும். விலை உயர்ந்த பொருட்களை கேட்டு அடம்பிடிக்க மாட்டார்கள்.
ஆறு முதல் 10 வயதிற்குள் பணத்தை பிள்ளைகளின் கையில் கொடுத்து கடைக்கு அனுப்புங்கள். அவர்கள் எப்படி செலவு செய்கிறார்கள். கூட்டல், கழித்தல் கணக்குகளை எளிதாக கற்றுக்கொள்ளலாம். செலவு செய்யும் போது அவர்கள் செய்யும் தவறை திருத்தலாம். கூடவே ஏழ்மையானவர்களுக்கு தானம் செய்வதையும் கற்றுத்தரலாம்.
டீன் ஏஜ் வயதில் பிள்ளைகளுக்கு எது அநாவசியம், எது ஆடம்பரம் என்று கற்றுக்கொடுங்கள். வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கி மாதந்தோறும் பணத்தை சேமிக்க கற்றுக்கொடுங்கள். சிறுசேமிப்பு பள்ளிகளில் இருந்தால் சேமிக்க பணம் கொடுங்கள். இன்றைய கால கட்டத்தில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை எப்படி உபயோகிப்பது என்றும் கற்றுத்தரலாம். மொபைல் ஆப்களையும் அறிமுகம் செய்யலாம்.
காலம் காலமாக பிள்ளைகளுக்கு பாக்கெட் மணி கொடுத்து பழக்கி விட்டோம். நாம் கொடுக்கும் பணத்தை எப்படி செலவு செய்வது எந்த அளவிற்கு சேமிப்பது என்று கற்றுக்கொடுப்பது அவசியம்.