இன்று கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள்..!
நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான கேப்டன் விஜயகாந்த், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி மறைந்தார். கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கோவில் போன்ற தோற்றத்தை உருவாக்கி கேப்டன் கோவில் என்றே கட்சியினர் அழைத்து வருகிறார்கள்.
யார் சந்திக்க வந்தாலும் அவர்களை நன்றாக சாப்பிட வைத்து விட்டே விஜயகாந்த் பேச தொடங்குவார். ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது பிறந்தநாள் அன்று விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவார்.இந்த ஆண்டு விஜயகாந்த் மனைவி பிரேமலதா நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
விஜயராஜ் என்ற இவரது பெயரை ‘விஜயகாந்த்’ என மாற்றியவர் இயக்குநர் எம்.ஏ.காஜா. தி.மு.க தலைவர் கருணாநிதி மீதும் மறைந்த த.மா.கா. தலைவர் மூப்பனார் மீதும் பாசம் அதிகம். மூப்பனார் பிறந்தநாளுக்கு காலையிலேயே அவரது மைலாப்பூர் வீட்டுக்குப் போய்விடுவார் விஜயகாந்த். மூப்பனாரும் இவரைச் சொந்த மகன்போல விபூதி பூசி வாழ்த்துவார். பின்னர், குடும்பத்துடன் உட்கார்ந்து உணவை முடித்ததும், வீட்டு வாசல்வரை வந்து விஜயகாந்தை வழியனுப்பி வைப்பாராம் மூப்பனார்.
விஜயகாந்துக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தபோது, அவரது நண்பர் திருப்பதி என்பவர் மதுரையிலேயே மிகப் பிரமாண்ட மண்டபத்தைத் தனது பெயரில் புக் செய்திருந்தார். விஜயகாந்துக்குத்தான் திருமணம் என்பது மண்டப நிர்வாகத்துக்குத் தெரியவந்ததும், ‘திருமணத்தை வேறு இடத்தில் நடத்திக்கொள்ளுங்கள். எங்கள் அரங்கத்தைத் தரமாட்டோம்’ என மறுத்துவிட்டார்களாம். கருணாநிதி, மூப்பனார் என வி.வி.ஐ.பி-க்கள் பங்கேற்கிறார்கள் எனச் சொல்லியும் மண்டப நிர்வாகத்தினர் ஏற்கவில்லை. இதை விஜயகாந்துக்குத் தெரியப்படுத்தியதும், அவர் எந்தவித கோபத்தையுமே காட்டிக்கொள்ளாமல், 'மண்பத்தை மாற்றிக்கொள்ளலாம்' எனக் கூலாகச் சொல்லிவிட்டாராம். ஆனால், உடனடியாக தென் மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர் ஒருவர் தலையிட்டு அதே மண்டபத்தில் விஜயகாந்தின் திருமணத்தை நடத்திக்காட்டினார். திருமணத்தின்போது தமுக்கம் மைதானத்தில் பொதுமக்கள் பலருக்கும் விருந்து. ஓப்பன் ஜீப்பில் மனைவி பிரேமலதாவுடன் அங்குவந்து மதுரை மக்களின் வாழ்த்துகளையும் வாங்கிக்கொண்டார் விஜயகாந்த்.
களத்தில் இறங்கி வேலை செய்வதில் முன்னால் வந்து நிற்பாராம் விஜயகாந்த். ஒருமுறை மதுரையில் நட்சத்திர விழாவை முடித்துவிட்டு நடிகர்கள் ரயில்மூலம் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, உள்ளிருந்த யாருக்கும் இரவு உணவு இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. அப்போது, நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் இந்த விஷயத்தைத் தயங்கி, தயங்கிச் சொல்லியிருக்கிறார்கள். கட்டியிருந்த லுங்கியுடன் நடுஇரவில் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியவர், அனைவருக்குமான உணவுப் பொட்டலங்களுடன் திரும்பி வந்தாராம். இதைப் பலநேரங்களில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார் நடிகர் சத்யராஜ்.
பல எதிர்மறை கருத்துகள் விஜயகாந்த்மீது கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. 2006-ல் ஒரேயொரு இடத்தில் வென்ற விஜயகாந்த்தான், 2011-ல் எதிர்க்கட்சித் தலைவர்.
இப்படி இவரை பற்றி நாம் பேசிக்கொண்டே போகலாம்.. அது தான் கேப்டன் விஜயகாந்த்...
.png)