1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஆனி அமாவாசை..! இன்று பல மடங்கு நன்மைகள் சேர இதை தானம் செய்யுங்க..!

1

ஆனி மாத அமாவாசையில் பித்ருக்களின் ஆசிகளை பெறுவதற்கும், நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், கிரக கோளாறுகள், பித்ரு சாபங்கள் ஆகியவை நீங்குவதற்கும் சில குறிப்பிட்ட பொருட்களை தானம் வழங்குவது மிகவும் முக்கியமானதாகும். ஆஷாட அமாவாசை அன்று ஏழைகளுக்கு உணவு மற்றும் பணத்தை தானமாக வழங்குவது மிகவும் சிறப்பானதாகும். ஆஷாட அமாவாசை அன்று கோதுமை மற்றும் அரிசியை தானமாக வழங்குவது சூரியன் மற்றும் சந்திரனின் ஆசிகளை பெறுவதுடன், ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களின் பலத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆயுள், ஆரோக்கியம், முக வசியம், அழகு, உயர் பதவி, உடல் வலிமை, தலைமை பதவி, அதிகாரம், செல்வம், மனநிறைவு ஆகியவற்றை தருவது இந்த இரண்டு கிரகங்களும் தான்.

பித்ருக்களின் சாபத்தால் திருமணம், குழந்தை பேறு போன்ற சுப காரியங்கள் நடைபெறுவதில் தாமதம், தடைகள் இருந்தால் முன்னோர்களை சாந்தப்படுவதற்காக அமாவாசை தினத்தில் நிலத்தை தானமாக கொடுக்கலாம் என சாஸ்திரங்கள் சொல்கிறது. நிலத்தை தானமாக கொடுப்பதால் ஒருவர் தான் செய்த பாவங்களில் இருந்து விடுபட முடியும். அதே போல் நெல்லிக்காய், பால், நெய், தயிர் போன்ற பொருட்களை தானமாக கொடுப்பதால் பொருளாதாரத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

சந்தர்ப்ப சூழ்நிலையால் திதி, தர்ப்பணம் கொடுக்க இயலாதவர்கள், அன்று வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு, கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால், திதி அளித்த பலன் உண்டாகும். தர்ப்பணம் முடிக்கும் வரை தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்துவிட்டு, அதன் பின் தினசரி பூஜைகளைச் செய்யலாம். அமாவாசை தினங்களில் அசைவம் மற்றும் வெங்காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

இன்றைய அமாவாசைக்கு ஒரு சிறப்பு உண்டு. இது சாபங்களையும், பாவங்களையும் நீக்கித் தூய்மையாக்கும் நாள். குறிப்பாக, இன்று காலதேவனின் 3-வது ராசியில் (சகோதர ராசி) அமாவாசை நிகழ்வதால், நீத்தார் வழிபாடு குடும்பத்தில் சகோதர ஒற்றுமையை மேம்படுத்தும். இன்று முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் சிக்கல்கள் நீங்கி, சுபிட்சம் பெருகும். திருமணத் தடைகள் நீங்கி, வீண் பண விரயங்கள் குறைந்து, வெளிநாட்டு முயற்சிகள் மற்றும் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

Trending News

Latest News

You May Like