1. Home
  2. தமிழ்நாடு

இன்று இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

1

நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் உள்ள மிகப்பழமை வாய்ந்த சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ் கடவுளான முருக பெருமானின் கோவில்களில் மிக முக்கியமானது. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் இன்று (ஜூலை 5) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது.

 குடமுழுக்கன்று சிவன், முருகன், பெருமாள் ஆகியோருக்கு ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் செயல் அலுவலர் முருகன் உள்பட இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 29-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

Sikkal Singavelan Temple

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முதல் கால யாகசாலை பூஜை நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதற்காக 52 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர். இதற்காக கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள பால் குளத்தில் இருந்து புனித நீர் யானை மீது எடுத்து வந்து யாகசாலையில் வைக்கப்பட்டது. நேற்று 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், சிக்கல் சிங்காரவேலர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Local-holiday

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “நாகை தாலுகா சிக்கலில் உள்ள சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு இன்று 5-ந் தேதி (புதன்கிழமை) அன்று நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே நாகை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 5) விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 8-ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு வேலை நாளாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like