1. Home
  2. தமிழ்நாடு

இன்று மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு..!

1

மதுரை வலையங்குளத்தில்  அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு இன்று லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெறுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால். இதற்கான பணிகளை கூடுதல் கவனம் செலுத்தி நேர்த்தியாக சீர்மிகு திட்டமிடுதலும் சிறப்பாக  செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுரை வலையங்குளம் கருப்பசாமி கோயில் எதிரே 65 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெறுவதற்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த  மாநாட்டுக்காக 5 லட்சம் சதுரஅடியில் கலையம்சம் நிறைந்த மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை இந்த எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.

மேலும், மாநாட்டு நிகழ்ச்சிகள் எல்இடி திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. பந்தலைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. காலை 7.45 மணிக்கு 51 அடி உயர கொடிக் கம்பத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி கட்சிக் கொடியேற்றி, மாநாட்டை தொடங்கி வைக்கிறார். ஜெயலலிதா பேரவை மற்றும் பிற அணிகளின் தொண்டர்கள் 3,000 பேர் அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர்.

பின்னர் மாநாட்டுப் பந்தலைத் திறந்துவைக்கும் பழனிசாமி, நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள அதிமுக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதையொட்டி உணவுக்கூடங்கள் மாநாட்டு பந்தலைச் சுற்றிலும் அமைக்கப்பட்டு 10 ஆயிரம் சமையல் கலைஞர்களைக் கொண்டு காலை முதல் இரவு வரை சுடச்சுட சுவைமிகு உணவுகளை தயாரித்து மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் கட்சியினருக்கும். பொதுமக்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும் விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி. சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாநாட்டிற்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்து நிறுத்திட வசதியாக  13 இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. மாநாட்டுத் திடலில் 51 அடி கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை 8 மணிக்கு ஏற்றி வைத்து, எழுச்சி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் கழக அம்மா  பேரவை சார்பில் 3 ஆயிரம் பேர் அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர். இதையடுத்து, அ.தி.மு.க. வீர வரலாற்றை உலகிற்கு எடுத்துக் காட்டும்  வகையில் அமைக்கப்பட்டுள்ள  புகைப்படக் கண்காட்சியை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

இதனை தொடர்ந்து  திரைப்பட இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா குழுவினரின் இசைக் கச்சேரி, நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியின் மூத்த முன்னோடி உறுப்பினர்களுக்கு எடப்பாடியார் பொற்கிழி வழங்கி கெளரவிக்கிறார். பின்னர்  மாலை 4 மணிக்கு முன்னாள் அமைச்சர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்டோரின் உரைக்கு பிறகு, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் எழுச்சிமிகு தலைமை உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட  அ.தி.மு.க.வினர் மற்றும்  பொதுமக்கள் பங்கேற்பார்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான தூய குடிநீர், உணவு, கழிப்பறை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் கழகப்பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் நேரடிக் கண்காணிப்பில்  சிறப்புடன் செய்யப்பட்டுள்ளது. அதே போல் மாநாட்டு திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பரிசோதனை மையங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர ஊர்தி வசதிகள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் மாநாட்டு திடலில்  செய்யப்பட்டு உள்ளது. 

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழகம் மட்டுமன்றி தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் வலிமையை மக்களிடம்  பறைசாற்றும் வகையில்  இந்த மாநாடு அமைந்திட  வேண்டும் என்பதில் அ.தி.மு.க.வினர் உறுதியாகவும் எழுச்சியுடனும் உள்ளனர். இந்த மாநாட்டின் எழுச்சி அ.தி.மு.க.வின் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கும் அச்சாரமாக அமைந்திடும்  என்பதால் நாளை நமதே 40 ம் நமதே என்ற லட்சியத்துடன் அ.தி.மு.க.வினர் மத்தியில் உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. இதனால் இந்த அ.தி.மு.க. எழுச்சி மாநாடு தமிழகத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி தமிழக அரசியல் வரலாற்றில் அதிரடி காட்டிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like