இன்று நகர்ப்புற நக்ஸல்களால் காங்கிரஸ் கட்சி நடத்தப்படுகிறது – பிரதமர் மோடி விமர்சனம்..!
மகாராஷ்டிராவில் நடைபெற்ற பிரதமரின் தேசிய விஸ்வகர்மா திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “விஸ்வகர்மா திட்டம் என்பது அரசின் திட்டம் மட்டுமல்ல. இந்தத் திட்டம், இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான திறன்களை வளர்ந்த இந்தியாவிற்குப் பயன்படுத்துவதற்கான ஒரு வரைபடமாகும்.
அதாவது பாரம்பரிய திறன்களுக்கு மரியாதை, கைவினைஞர்களின் அதிகாரம் மற்றும் விஸ்வகர்மா சகோதரர்களின் வாழ்வில் செழிப்பு. இதுவே எங்களின் இலக்கு. நாட்டின் 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், 2.5 லட்சத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகள், 5 ஆயிரம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து இந்த திட்டத்துக்கு உத்வேகம் அளித்து வருகின்றன. ஒரு வருடத்தில், 18 வெவ்வேறு தொழில்களைச் சேர்ந்த 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். ஒரே ஆண்டில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர்.
இதுவரை, 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விஸ்வகர்மா சகோதரர்களுக்கு நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது அவர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்துகிறது; அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது. இதுமட்டுமின்றி, உங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்த, உத்தரவாதமின்றி ரூ. 3 லட்சம் வரை கடனையும் பெறலாம். ஓராண்டுக்குள் விஸ்வகர்மா சகோதர, சகோதரிகளுக்கு ரூ.1,400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
SC, ST மற்றும் OBC சமூகங்களைச் சேர்ந்தவர்கள் நமது பாரம்பரியத் திறன்களில் அதிகம் பங்கு பெற்றுள்ளனர். முந்தைய அரசுகள் விஸ்வகர்மா சகோதரர்கள் மீது அக்கறை கொண்டிருந்தால், அவர்ளால் சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய சேவை கிடைத்திருக்கும்! ஆனால் காங்கிரஸும் அதன் கூட்டாளிகளும் வேண்டுமென்றே SC/ST/OBC களை முன்னேறவிடவில்லை. காங்கிரஸின் இந்த தலித் விரோத மற்றும் பிற்படுத்தப்பட்டோர் விரோத சிந்தனையை அரசு அமைப்பில் இருந்து அகற்றியுள்ளோம்.
கடந்த 1 வருட புள்ளிவிவரங்கள், இன்று SC/ST மற்றும் OBC சமூகங்கள் விஸ்வகர்மா திட்டத்தின் அதிகபட்ச பலன்களைப் பெறுகின்றன என்பதைக் காட்டுகிறது. திறன் மேம்பாட்டு பிரச்சாரத்தின் கீழ், நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு இன்றைய தேவைக்கேற்ப திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்கில் இந்தியா போன்ற பிரச்சாரங்கள் இந்தியாவின் திறன்களை உலகம் முழுவதும் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன.
இன்று நாம் பார்க்கும் காங்கிரஸ் மகாத்மா காந்தி போன்ற பெரிய மனிதர்களுடன் இணைந்த காங்கிரஸ் அல்ல. இன்றைய காங்கிரஸில் தேசபக்தி உணர்வு செத்துப்போயிருக்கிறது. இன்றைய காங்கிரசுக்குள் வெறுப்புப் பேய் புகுந்துவிட்டது. அந்நிய மண்ணுக்குச் சென்று நமது நாட்டை காங்கிரஸ் அவமதிக்கிறது. இன்று நாட்டில் ஊழல் மற்றும் நேர்மையற்ற கட்சி காங்கிரஸ். நாட்டின் ஊழல் மிகுந்த குடும்பம் காங்கிரஸின் முதல் குடும்பம். இழிவான சிந்தனை உள்ளவர்களாலும், நகர்ப்புற நக்ஸல்களாலும் காங்கிரஸ் கட்சி தற்போது நடத்தப்படுகிறது.
நமது நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தின் மீது சிறிதளவு மரியாதை உள்ள கட்சியால்கூட கணபதி பூஜையை எதிர்க்க முடியாது. ஆனால் இன்றைய காங்கிரஸ் கணபதி பூஜையை வெறுக்கிறது. நான் கணபதி பூஜை நிகழ்ச்சிக்கு சென்றபோது, காங்கிரஸின் தாஜா அரசியல் எனக்கு நன்றாகவே தெரிந்தது. கணபதி பூஜையை காங்கிரஸ் எதிர்க்கத் தொடங்கியுள்ளது. ஒரு பிரிவினரை திருப்திப்படுத்த காங்கிரஸ் எதையும் செய்கிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு விநாயகரை சிறையில் அடைத்தது. மக்கள் வழிபட்டு வந்த விநாயகர் சிலை போலீஸ் வேனில் சிறை வைக்கப்பட்டது. கணபதிக்கு நடந்த இந்த அவமானத்தை பார்த்து நாடு முழுவதும் மக்கள் கொதிப்படைந்தனர். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூட வாய் திறக்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. விநாயகரை அவமதித்ததை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் தைரியம் இல்லாத அளவுக்கு அவர்களும் காங்கிரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸின் இந்த பாவங்களுக்கு நாம் ஒன்றுபட்டு பதில் சொல்ல வேண்டும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.