பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய.. காவல் உதவி QR CODE திட்டம் அறிமுகம்..!
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக காவலன் செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் உதவி க்யூ ஆர் கோடு திட்டத்தை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
பெருநகர சென்னை காவல்துறை சார்பில் உஃபர், ஒலா, ரேபிடோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பதிவு செய்த ஆட்டோக்கள், கார்கள், மற்ற வாகனங்களிலும் காவல் உதவி கியூ ஆர் குறியீடு ஒட்டப்பட்டு வருகிறது.
இதன் மூலம் வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள், பொதுமக்கள் ஆகியோர் தங்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் இந்த கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து எஸ்ஒஎஸ் பொத்தானை அழுத்தினால் நாம் இருக்கும் இடத்தின் தகவல், ஆட்டோ, கார்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோரின் தகவல் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும்.
உடனே, அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவத்து போலீசார் நாம் இருக்கும் இடத்துக்கு உடனே வந்து விடுவர். இதனால், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதுதான் அந்த காவல் உதவி கியூ ஆர் குறியீட்டின் பயன்கள்.
இந்த திட்டம் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டு அனைத்து ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஒட்டப்பட்டன. அதன்படி, சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்களில் காவல் உதவி கியூ ஆர் குறியீடு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த ஸ்டிக்கர்கள் கிடைக்காத ஆட்டோ, வாகன ஒட்டுநர்கள், உரிமையாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம்
இதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். அதன்படி, வாகனங்களின் உரிமையாளர்கள் விவரம் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்ட பின்னர், காவல் உதவி கியூ ஆர் குறியீடு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும். இதனை டவுன்லோடு செய்து வாகனங்களில் ஒட்டிக் கொள்ளலாம்.